இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் டாக்குமென்டரி மற்றும் கிராஃபிக் நாவல்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தோனி தயாரிப்பின் இயக்குனர் யார் ?
கோலிவுட்டின் சமீபத்திய தகவலின் படி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் தற்போது தமிழ் சினிமாவில் உலகநாயகன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கிய பிறகு புகழின் உச்சத்தில் இருக்கும் லீடிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையலாம் என கூறப்படுகிறது.
தளபதி 67 படத்தை தோனி தயாரிக்கிறாரா?
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள 'தளபதி 67' திரைப்படமாக இந்த தகவல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் இணையத்தில் மட்டுமே பகிரப்படுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதியான தகவல் இதுவரையில் எதுவும் வெளியாகவில்லை.
தோனி மனைவியின் சாய்ஸ் :
சமீபத்தில் மகேந்திர சிங் தோனி இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி இயக்கத்தில் ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த கருத்தை தோனியின் மனைவி சாக்ஷி கூறியதாகவும் கூறப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களில் எது ஃபைனல் நிலையை அடைந்து தோனியின் முதல் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படமாக இருக்கும் என்பது குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.
தளபதி 67 :
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' திரைப்படம் மூலம் சிக்ஸர் அடித்து தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்து சாதனை படைத்தவர். தற்போது தளபதி 67 திரைப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் மும்மரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த உடன் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.