பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விஜய் சேதுபதியின் 50 படமாக உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ள திரைப்படம் மகாராஜா’. ’தி ரூட்’ நிறுவனம் - பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசியதாவது:
‘என்னை நம்பிய சீனு ராமசாமி’
நடிகர் விஜய்சேதுபதி, என் இயக்குநர், என் குருநாதர் சீனு ராமசாமி சாருக்கு நன்றி. அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும்போது, என்னை மாதிரி ஒரு ஆள, யாருமே நம்பாத, நானே நம்பாத ஒரு ஆளை வச்சு அந்தப் படத்தின் ஷூட்டிங்க முடிச்சது மிக ஆச்சர்யமான ஒரு விஷயம். அதுக்கு அவருக்கு நன்றி. எனக்கு நடிக்கவே தெரியாதபோது சி.ஜே. பாஸ்கர் எனக்கு சீரியல்ல வாய்ப்பு கொடுத்து, நான் துவண்டு போகும்போது ஒரு நாள் வந்து “உன் கண்ணும் சிரிப்பும் நடிக்கும்போது நல்லா இருக்கு, நீ நல்லா வருவ”னு சொன்னாரு. அவருக்கு நன்றி. எனக்கு உதவி செய்த நிறைய பேருக்கு நன்றி. இந்த 50 படங்களும் ஒரு மாலையாக இருந்தால், அதில் இருக்கும் ஒவ்வொரு மணியும் இங்க இருக்க அத்தனை பேராலும் அது கோர்க்கப்பட்டிருக்கிறது. என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுகள் என அனைத்தும் என்னை யோசிக்க தான் வைத்தன.
பாய்ஸ் மணிகண்டனின் நேர்க்காணல்
துபாயில் நான் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஃபைவ் ஸ்டார் படத்துக்கும், பாய்ஸ் படத்துக்கும் ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் ஃபோட்டோ அனுப்பினேன். மணிகண்டனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவரது சமீபத்திய இண்டர்வியூவை நான் எதேச்சையாக பார்த்தேன். வருத்தம் என்னவென்றால், இனிமே இந்த வாழ்க்கை எவ்வளவு பயமுறுத்தினாலும் பயப்பட மாட்டேன்டா என ஒருவர் உணர்ந்தது போல் அந்த இண்டர்வியூ இருந்தது. பெரிய பூதம், பேய் என்றால் அது வாழ்க்கை தான்.
நேற்று இருந்த நொடி இன்று இல்லை. அந்த இண்டர்வியூ அவ்வளவு என்னை ஈர்த்தது. நான் உதவி பண்ணனும் இல்லை காப்பாத்தணும் எனும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. ரொம்ப சுவாரஸ்யமான நபராக இருந்தார். அதனால் இயக்குநரிடம் அவர் பற்றி சொன்னேன். திறமை இல்லாத யாரையும் வாய்ப்பு கொடுத்து வளர்க்க முடியாது. அது மாதிரி முயற்சி செய்து நான் தோற்றுப்போய் இருக்கிறேன்.
மணிகண்டனைப் பொறுத்தவரை வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதல் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் சந்தோஷம்” எனப் பேசியுள்ளார். 2014ஆம் ஆண்டு காதல் 2014 படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் அமையாமல் இருந்த பாய்ஸ் மணிகண்டன், சென்ற ஆண்டு தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்க்காணல் வைரலானது. இந்நிலையில் பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் சென்ற ஆண்டு நடித்த அவர், தற்போது விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்துள்ளார்.