விஜய் சேதுபதி


தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) ஒருவர் என்று உறுதியாக சொல்லலாம். சினிமாவின் எந்தவித பின்னணியும் இல்லாமல் நடிகராக வேண்டும் என்கிற கனவை சுமந்து அயராது உழைத்திருக்கிறார். குடும்பச் சூழலால் துபாய்க்கு வேலைக்குச் சென்று இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாகத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். நாயகனான பின் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல் வில்லன், சிறப்பு கதாபாத்திரம், ஆஃப் பீட்டான படங்கள் என எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்துபார்ப்பது அவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. 


மகாராஜா


தற்போது விஜய் சேதுபதி தனது 50ஆவது படத்திற்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ளது மகாராஜா (Maharaja). இப்படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி , பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.ஏல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மகாராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு முன்னதாக சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தான் துபாயில் வேலைபார்த்த அனுபவங்களைப் பற்றி மிக உருக்கமாக பேசியுள்ளார் .


கனவு காண கூட நேரம் இருக்காது


நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி “என்னுடைய 21 வயதில் நான் துபாய்க்கு வேலைக்குச் சென்றேன். என் குடும்ப சுமையை குறைக்க என்னால் அப்படிதான் உதவ முடிந்தது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்புவேன். துபாயில் அங்கங்கு வைக்கப்பட்டிருக்கும் கூல் ட்ரிங்ஸ் வெண்டிங் மிஷினை பலநாள் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறேன்.


வெளிநாட்டில் வேலை என்றால் நான் அங்கு ஜாலியாக எல்லாம் இல்லை. வாரத்தில் ஒரு நாள் நாங்கள் அனைவரும் கறி சமைத்து சாப்பிடுவோம். தங்கியிருந்த அறையை சுத்தம் செய்வோம், கிரிக்கெட் விளையாடுவோம், எங்கள் கழிவறையை சுத்தம் செய்வோம். ஒரு 21 வயது இளைஞனுக்கு கனவு காண கூட அங்கு நேரம் இருக்காது. துபாய் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் மகாராஜா படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பானபோது கூட நான் 21 வயதில் அங்கு வேலை செய்து எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்ற்ய் விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.