விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் 50-வது படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. புதுமையான திரைக்கதை , விஜய் சேதுபதியின் நடிப்பு என ரசிகர்கள் இப்படத்தின் பாசிட்டிவ்களை குறிப்பிட்டுள்ளார்கள்.


சினிமாவில் சின்ன சின்ன துணைக் கதாபாத்திரங்களில் நடித்து இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாராக அறியப்படுகிறார் விஜய் சேதுபதி. சினிமாவுக்கு வருவதற்கு முன் மார்கெட்டிங் , சேல்ஸ்மேன்  , கேஷியர் , ஃபோன் பூத் ஆப்பரேட்டர்  என பல்வேறு வேலைகளை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. பின் தனது குடும்ப சூழல் காரணமாக துபாயில் வேலைக்கு சென்றார். சில வருடங்கள் அங்கு வேலை செய்து சலித்து பின் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். 


நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு சாமானிய மனிதனாக தனக்கு இருக்கும் தேடல்களை , தன்னுடைய அனுபவங்களையும் அவர் பேசும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில்  நேரகாணல் ஒன்றில் ஒரு ஸ்டாராக இருப்பதை விட தன்னுடைய இளமைக் காலத்தை ரொம்பவும் மிஸ் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


நான் என்னை ரொம்ப மிஸ் பண்றேன்


இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியில் நீங்கள் இந்த உலகில் ரொம்ப அதிகம் மிஸ் செய்யும் ஒரு நபர் யார் என்று கேள்வி கேட்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். இதற்கு பதிலளித்த அவர்  ”நான் இளமை காலத்தில் இருந்ததை தான் ரொம்ப மிஸ் செய்கிறேன். வாழ்க்கையில் எந்த வித கனவும் இல்லாமல் ரொம்பவும் இன்னஸண்டாக ஒருவனாக நான் இருந்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு வாழ்க்கையில் எந்த விதமான லட்சியமும் இருக்கவில்லை.


என் நண்பர்கள் எல்லாம் அடுத்த வருடம் பாடத்திட்டத்தில் என்ன வரப்போகிறது என்று பேசிக்கொண்டிருப்பார்கள் . நான் எதையும் கவனிக்காமல் சுத்திக் கொண்டிருப்பேன்.  நான் படிப்பிலோ விளையாட்டிலோ எதிலும் சிறந்தவனாக இருந்தது இல்லை. ஆனால் எனக்கு வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்தது.


அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது ஆனால் அப்படி ஒரு ஆசை மட்டும் இருந்தது. அப்போது நான் ரொம்ப இன்னஸண்டாக அப்பாவியாக இருந்தேன். அதை தான் நான் மிஸ் செய்கிறேன்“ என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.