தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'மகாபாரதம்' புராண தொடரில் சகுனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல். அவர் இன்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.


திரையில் அறிமுகம் :


1975 ஆம் ஆண்டு வெளியான 'ரஃபு சக்கர்' படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 80களில் பாலிவுட் படங்களான “சுஹாக்”, “தில்லாகி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களான “சிஐடி”, “ஹலோ இன்ஸ்பெக்டர்” போன்றவற்றில் நடித்துள்ளார். இருப்பினும் பிஆர் சோப்ராவின் 'மகாபாரதத்தில்' சகுனி மாமா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 


 



நிம்மதியான மரணம் : 


நடிகர் குஃபி பெயின்டலுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் சில காலமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் குஃபி. கடந்த 10 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்த்தனர் அவரின் குடும்பத்தார். திடீரென இன்று காலை 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் தூக்கத்திலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உயிர் தூக்கத்திலேயே நிம்மதியாக பிரித்ததாக அவரது மருமகன் ஹிட்டன் பெயின்டல் செய்தியாளர்களிடம் தெரிவிட்டுள்ளார். 


திரை பிரபலங்கள் இரங்கல்:


திரையுலகில் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைவது திரை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது அனைவர் மத்தியிலும் 'சகுனி மாமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான குஃபி பெயின்டல் மறைவு செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியா பக்கம் மூலம் அவரின் மாறவில்லை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 


குஃபி பெயின்டல் இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணி அளவில் அந்தேரியின் புறநகர் பகுதியில் உள்ள ஓஷிவாரா தகன மைதானத்தில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.