நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தின் சர்ச்சை குறித்து மகாபாரத நடிகர் கஜேந்திர சவுகான் பதிலளித்துள்ளார்.


கடும் சர்ச்சையில் ஆதிபுருஷ் 


வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி ஓம் ராவத்  இயக்கத்தில் உருவான ‘ஆதிபுருஷ்’ படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ளனர். ஆதிபுருஷ் படம்  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என  5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. 


இந்த படம் வெளியாகி இன்றோடு ஒருவாரம் ஆன நிலையில் ரூ.360 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இப்படியான நிலையில், ஆதிபுருஷ் படம் நாளும் ஒரு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தின் வசனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், புதிய வசனம் இடம் பெற்றது.  


ராமரை ஸ்ரீ ராமராக பார்க்க விரும்புகிறேன்


தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் நடித்த கஜேந்திர சவுகான், ஆதிபுருஷ் படம் தொடர்பாக தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, ‘இந்தப் படத்தைப் பார்க்க நான் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால் சில காரணங்களால், நான் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்பதை என் மனசாட்சி ஏற்க மறுத்து விட்டது. சொல்லப்போனால், ட்ரெய்லர்கள் மற்றும் காட்சிகள் அனைத்தையும் பார்த்த பிறகு இந்த படம் மதிப்புக்குரியது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது நம்பிக்கைகளை நான் சமரசம் செய்ய விரும்பவில்லை. நான் ராமரை ஸ்ரீ ராமராக பார்க்க விரும்புகிறேன். ஆதிபுருஷ் பின்னணியில் ஆழமான சதி இருப்பதாக நான் நம்புகிறேன். இதன்மூலம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். 


ராமாயணம் பற்றி எந்த அறிவும் இல்லை


ஏற்கனவே மகாபாரதத்தில் பீஷ்மராக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா, ஆதிபுருஷ் படத்தை குற்றம் சாட்டியிருந்தார். தயாரிப்பாளர்கள்   ராமாயணத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். யூடியூப் சேனலில் அவர் இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், 'ராமாயணத்திற்கு ஆதிபுருஷை விட பெரிய அவமரியாதை எதுவும் இல்லை. ஓம் ரவுத்துக்கு ராமாயணம் பற்றி எந்த அறிவும் இல்லை என்று தெரிகிறது. நமது ராமாயணத்தை கலியுகமாக மாற்றிய சிறந்த அறிவுஜீவி எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர் சுக்லாவும் இருக்கிறார். அவரது முட்டாள்தனமான வசனங்களும், தூக்கத்தை வரவழைக்கும் திரைக்கதையும் தூக்க மாத்திரைகளைக்கூட முகம் சுளிக்க வைக்கும் படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்துக்கும் இதுவரை எழுதப்பட்ட ராமாயணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.