நடிகர் விக்ரமும் அவரது மகனுமான துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் மகான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.



பல மொழிகளில் வெளியாகும் ’மகான்’


‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.


கார்த்திக் சுப்பராஜ் 


விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. ‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


விக்ரம் பேசியது 


முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ‘சீயான்’ விக்ரம் கூறுகையில், “மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் கலவையாக இருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். 


எனது மகன் துருவ் விக்ரம் இபடத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகச் சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது.


துருவ் விக்ரம் பேசியது 


மகான் எனக்கு முக்கியமான திரைப்படம் என்பேன். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.