துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தின் போஸ்டர் ரீல் வெளியிடப்பட்டுள்ளது.
மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது.
முதன்முறையாக விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டர் ரீல் வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் மிரட்டும் தோற்றத்தில் இருக்கிறார். படத்துக்காக நிறையவே மெனக்கிட்டு உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார் துருவ் விக்ரம். தாதா எனும் வேடத்தில் அவர் மிரட்டக் காத்திருக்கிறார். ஏற்கெனவே அவர் தனது முதல் படமான வர்மாவில் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசாத்யமான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான். ஆதலால் மகான் படத்திலும் அவர் நிச்சயம் மிரட்டுவார் என்று திரை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் தான் போஸ்டர் ரீல் அமைந்துள்ளது. போஸ்டர் ரீல் வெளியான சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
அதாவது மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் என்பது தான் இந்தத் திருக்குறளின் பொருள். இந்தக் குறளுக்கும் கதைக்கும் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும்.
அதேபோல், தந்தையும் மகனும் (விக்ரம், துருவ் விக்ரம்) இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவென்பதால். நடிப்பில் துருவ் விக்ரம் பெறும் பெயர், இந்தக் குறளுக்கான விளக்கமாக அமையும். இந்தப் படம் விக்ரமின் 60வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது.
மகான் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று போஸ்டர் ரீல் வெளியாகியுள்ளது. இதில் துருவ் விக்ரம் இன்னும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.