2012 ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி அருண்விஜய் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தடையறத் தாக்க. மகிழ் திருமேனி சுவாரஸ்யமான திரைப்படத்தை ஒரு கதைசொல்லக்கூடியவர் எனபதை இந்தப் படத்தில் அடையாளம் கண்டுகொன்டார்கள் ரசிகர்கள்.
கதை என்ன?
செல்வா என்கிற ஒருவன் சொந்தமாக ஒரு ட்ராவல்ஸ் நடத்தி வருகிறான். ஒரு பெரிய ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவனை செல்வா அடித்துவிட்டதாகவும் அந்த ரவுடி கோமாவிற்கு சென்றுவிட்டதால் ஒரு பெரிய கும்பல் செல்வாவை கொல்ல தேடிக்கொண்டிருக்கிறார்கள். செல்வாவிற்கு இருப்பது இரண்டே வழிகள்தான் ஒன்று அவன் நிரபராதி என்று நிரூபிப்பது, இல்லையென்றால் அந்த மொத்த ரவுடி கும்பலையும் எதிர்த்து நிற்பது.
தடையறத் தாக்க படத்தின் கதை ஒவ்வொரு சாமானியனும் தன் வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கும் வகையில் இருந்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம். ஒரு நகரத்தில், ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதன். அவனை சுற்றி எத்தனையோ மனிதர்கள் அதிகாரத்தின் பெயரால் பணபலத்தின் பெயரால், இன்னொரு மனிதனின் வாழ்க்கையை சுரண்டுகிறார்கள் . அதை எல்லாம் அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அதை பார்த்து நாம் கோபப்படலாம், மனதிற்குள் திட்டலாம். ஆனால் தடுத்து நிறுத்துவதற்கோ கேள்வி கேட்பதற்கோ அவனிடம் என்ன இருக்கிறது? இப்படியான ஒருவன் தன் விருப்பமின்றி ஒரு பிரச்சனைக்குள் இழுத்துவிடப்படுகிறார். படத்தில் ஒரு கணம் அருண்விஜய் இடத்தின் நாம் நம்மை சக்தியற்றவனாக உணர்வோம்..
திரைக்கதை:
ஆனால் இந்தக் கதையின் உணர்வை முழுவதுமாக படத்தின் இறுதிவரை கடத்தத் தவறியது இந்தப் படத்தின் திரைக்கதை. இந்தப் படம் ஒரு கல்ட் சினிமாவாக மாறுவதற்கான அத்தனைக் கூறுகளும் இந்தப் படத்தில் இருந்தன. ஒவ்வொரு காட்சியின் நீளம் சரியாக கையாளப்பட்டிருந்தாலோ அல்லது படத்தொகுப்பு விறுவிறுப்பாக அமைந்திருந்தால் நிச்சயம ஒரு எடுத்துக்காட்டான படமாக இது இருந்திருக்கும்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் தன் சார்பில் முழு நியாயம் சேர்ந்திருந்தார். தமனின் இசை தனித்து தெரியும் வகையில் இல்லையென்றாலும் பின்னனியில் சரியாக பொருந்தியிருந்தது. சொல்லப்போனால் மகிழ் திருமேனி அடுத்தடுத்து இயக்கிய படங்களில் திரைக்கதை நன்றாக கூடி வந்திருந்தது என்றாலும் தடையறத் தாக்க படத்தின் கதையில் இருந்த அந்த ஒரு எளிமையான அம்சம் இல்லாததே அவரது படங்கள் வெறும் மூலைக்கு ஒரு ஜிம் க்ளாஸாக மட்டும் இருக்கின்றன.
அடுத்ததாக நடிகர் அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்க இருக்கிறார் மகிழ் திருமேனி. நிச்சயம் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் ஒரு சாமானியனை படத்திற்குள் அனுமதிக்கும் பக்குவத்தை வைத்திருக்குமா? எனபதை படத்தைப் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.