இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் என யாரேனும் இருப்பார்களா என்ன? அந்த அளவுக்கு 48 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு தன்னுடைய இசையால் கோடான கோடி மக்களை வசியம் செய்து வைத்துள்ளார்.
மேஸ்ட்ரோவாக கொண்டாடப்படும் இளையராஜா சர்வதேச அளவில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். ஆனால் சமீபத்தில் அவரின் மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததால் அந்த மீளா சோகத்தில் இருந்த இசைஞானி கச்சேரிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். தற்போது அந்த வேதனையில் இருந்து வெளி வருவதற்காக மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி மீண்டும் கச்சேரிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக 'Truly live in concert' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு இசை வெள்ளத்தில் மெய்மறந்தனர். அதே போன்ற ஒரு இசை கச்சேரி லண்டன் மற்றும் பாரிஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து பாரிஸ் நகரம் வரையில் ரயிலில் பயணம் செய்தார். கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக வித்தியாசமான தோற்றத்தில் இசைஞானி இளையராஜா பயணம் செய்த அந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு பின்னணியில் 'ராஜா ராஜாதி ராஜன் இங்கு ராஜா...' என பாடல் வரிகள் ஒலிப்பது அத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது.
இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.