சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் சாரல் மழை:
சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், வண்டலூர், முடிச்சூர் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவரே செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் கடந்த இரு தினங்களாக, சற்று மேகமூட்டத்துடன் வானிலை நிலவிய நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திடீரென மழையானது பெய்தது. இடி மற்றும் மின்னலுடன் மழையானது பெய்தது. மேலும், மழையானது அதிகாலை 3 மணி வரை பெய்தது.
வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டில் பொதுவாக வடகிழக்கு பருவமழையே அதிகளவு மழைப்பொழிவைத் தரும். தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்யும். ஆனால், இந்த முறை தென் மேற்கு பருவமழை இயல்பை விட 88 சதவீதம் தமிழ்நாட்டில் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையும் அதிகளவு பெய்யும் என்று கருதப்படுகிறது. இதனால், தற்போது முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், முக்கிய நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேசமயம் மழைநீரை வீணாகாமல் சேர்த்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.