மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படம் குறித்த  அப்டேட் ஒன்றை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


டீசர் விரைவில் ரிலீஸ்?


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 




முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை முழுவீச்சில் படக்குழு தயார் செய்து வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் டீசர் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியானது.


சாகசங்களுக்குத் தயாராகுங்கள்...


அதுமட்டுமின்றி பிரம்மாண்ட படம் என்பதால் டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பொன்னியின் செல்வன் படத்தின் கதைக்களமான தஞ்சாவூரை படக்குழு தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.


ஆனால் இத்திட்டம் முன்னதாகக் கைவிடப்பட்ட நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் டாக்கீஸ், ’வருகிறான் சோழன்’ எனும் கேப்ஷனுடன் படம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளது. 


சோழர்கள் கொடி, பழங்கால இசையுடன் மோஷன் போஸ்டர் போன்று இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ”சாகசங்கள் நிறைந்த வாரத்துக்கு தயாராகுங்கள்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களில் பிரம்மாண்ட வெற்றிகளைக் கண்டு தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரம்மாண்ட வெற்றி சினிமா உருவாக வேண்டும் எனக் காத்துள்ள ரசிகர்களையும், பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களையும் இந்த அப்டேட் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.