Leo Case: அதிக வன்முறை உள்ள படங்களை இயக்குவதால் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவில், லோகேஷ் கனகராஜ் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. படத்தில் அதிக வன்முறைகள் இருப்பதால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு அறிவுறுத்தியிருந்தது. லியோ படம் ரிலீசாக ரூ.600 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது. லியோ படத்தில் வன்முறைகள் காட்சிகள் அதிகம் இருப்பதாக படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாகவே கருத்துகள் வெளியாகி வந்தன. 

 

இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ விஜய் நடித்திருந்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்ததாகவும், படத்தில் வன்முறை, சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் உதவி இருந்தால் செய்ய முடியும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், தவறான வழிகாட்டுதல்களை கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் படங்களை தணிக்கை குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றதுடன், லோகேஷ் கனகராஜூக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுப்பதற்காக அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகததால், மனு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

 

அதன்படி இன்று தொடங்கிய விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்முறை காரணத்தால் எஸ்.ஜே சூர்யாவின் நியூ திரைப்படம் தடை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து பேசிய லோகேஷ் கனகராஜ் தரப்பு, விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதிகள், லியோ படத்தில்  எத்தனை வன்முறை காட்சிகள் இருந்தது என்றும், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது குறித்தும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.