தடை செய்யப்பட்ட பிரபல டிக் டாக் ஆப்பில் ரவுடி பேபி எனும் பெயரில் இயங்கி பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த சூர்யா (வயது 35).


இவர் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திலகா மற்றும் அவரது கணவர் முத்து ஆகிய யூடியூபர்கள் குறித்து தகாத முறையில் பேசி வீடியோ பகிர்ந்துள்ளார். சுப்பு லட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா ஆபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவக்கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.


மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் திலகா முன்னதாக புகார் அளித்தார்.


இதனையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் தங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா (35), அவரது நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கா (48) ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4 ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தொடர்ந்து சிறையில் உள்ள சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.


இதனையடுத்து மதுரையில் வைத்து கோவை காவல்துறையினர் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த சிக்கந்தர் என்கிற சீக்கா ஆகியோரையும் கடந்த ஜனவரி 4ம் தேதி கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி முதல் குண்டர் சட்டத்தில் இருந்துவரும் இருவரும் காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ரவுடி பேபி சூர்யா பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து அவர்கள் முன்பு லேப்டாப் மூலம் இருவரது டிக் டாக் காட்சிகளையும் காண்பித்தார்.


இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கினை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். இதனால் மேலும் 6 வாரங்கள் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.