நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காத படத்தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
கடந்த 2018-ம் ஆண்டு அரவிந்த் சாமி, அமலா பால், நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஹர்ஷினி புரோடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பளமாக ரூ. 3 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி, ஊதிய தொகை முழுவதையும் வழங்கவில்லை என அரவிந்த் சாமி நீதிமன்றத்தை நாடினார்.
சம்பள பாக்கி
இந்தப்படத்துக்காக ஒப்பந்தத்தின்படி, வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.30 லட்சம், அதோடு TDS வரிப்பிடித்தம் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் முறையாக வழங்கப்படவில்லை அதோடு, பட வெளியீட்டின்போது பெற்ற ரூ.35 லட்சம் கடனை திருப்பித்தரவில்லை என்பதால் படத்தயாரிப்பாளர் முருகன் குமார் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் அரவிந்த்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டிய தொகையை 18% வட்டியுடன் சேர்த்து ரூ.65 லட்சமும் டி.டி.எஸ். தொகை ரூ.27 லட்சமும் செலுத்த தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.
ஆனால், படத்தயாரிப்பாளர் முருகன் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை, தொகையை வழங்காததால் உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்தக் கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துகளை அறிவிக்கக்கோரியும் கடந்த 2020ஆம் ஆண்டு அரவிந்த்சாமி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். என மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்குவந்தது. வாதத்தின்போது, படத்தயாரிப்பாளர் முருகன் சார்பில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில், கைது நடவடிக்கையை தவிர்க்க தயாரிப்பாளர் தன்னை திவாலானதாக அறிவிக்கலாம் என நீதிபதி அறவுறுத்தியுள்ளார். மேலும், சொத்து விவரம் குறித்து தகவலை சமர்பிப்பது தொடர்பான மனு மீதான விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.