லியோ படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை மடோனா பகிர்ந்துள்ளார்.


லியோவின் சகோதரி


பிரபல மலையாள நடிகையான மடோனா செபாஸ்டியன் லியோ படத்தின் நடிகர் விஜய்யின் ட்வின் சகோதரியாக சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பான் இந்திய திரைப்படமாக வெளியான லியோ படத்தின் கேரள ஆடியன்ஸைக் குறிவைத்து மடோனா படத்தின் காஸ்ட் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யுடன் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் தோன்றியிருந்தார்.


எலிசா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யுடன் நா ரெடி தான் வரவா பாடல் உள்பட சில காட்சிகளில் நடனமாடி அவர் நடித்து இருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியானது முதல் மடோனாவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மடானாவின் பதிவு


மேலும் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் தள புகைப்படங்களையும் பகிரும்படி கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தன் ரசிகர்களின் ஆசையின்படி லியோ செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மடோனா பகிர்ந்துள்ளார்.


நடிகர் விஜய்க்கு கேரளாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில்,  தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






மலையாள சினிமாவில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான மடோனா மலையாள சினிமா தாண்டி பலதரப்பு ரசிகர்களையும் அப்படம் மூலம் ஈர்த்தார். மேலும் தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த காதலும் கடந்து போகும் படத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது தவிர கவண், வானம் கொட்டட்டும், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.


விஜய் உடன் நடித்த அனுபவம்


முன்னதாக விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்ட மடோனா, “விஜய் செட்டில் குழந்தை மாதிரி, வேற மாதிரி மாறிவிடுவார். அர்ஜூனைப் பார்த்து பயப்பட்டேன். முதல்வன் பற்றி அவரிடம் பேசினேன்” என்றெல்லாம் பேசியிருந்தார். 


லியோ திரைப்படம் இதுவரை 461 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கடந்த அக்.26ஆம் தேதி படக்குழு அறிவித்திருந்தது. விரைவில் 500 கோடிகள் வசூலை படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ படத்துக்கு வெற்றி விழா கொண்டாட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


நவம்பர் ஒன்றாம் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் விஜய் கலந்து கொள்ள உள்ளதால் விழாவில் பாதுகாப்பு கோரி லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல்நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கெனவே இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என எதிர்பார்த்து விழா ரத்தான நிலையில், வெற்றி விழாவை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்