ராக்கெட்ரி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியை சந்தித்த மாதவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.
ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவன் நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ராக்கெட்ரி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியை சந்தித்த மாதவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் மாதவனை அழைத்து சால்வை பொத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டுகிறார். அதனை தொடர்ந்து ரொம்ப நன்றி சார்... ரொம்ப நன்றி... என்று ரஜினி காந்த் காலில் விழுந்து மாதவன் ஆசிர்வாதம் வாங்குகிறார். இவர்கள் இருவருக்கும் அருகில் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் அமர்ந்திருந்தார்.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிகளுக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷண் நம்பி நாராயணன் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவன் தன்னை நிரூபித்திருக்கிறார்.
இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என ரஜினி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்