சென்னை அருகே சந்தேகத்தால் காதல் மனைவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி பால்கிஸ் உடன் வசித்து வருகிறார். இவரது 18 வயது மகள் தமிழ்செல்வி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்த மெக்கானிக் மதன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்டார். 3 மாதங்கள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் தம்பதியினர் இடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜூன் 23 ஆம் தேதி தமிழ்செல்வி மாயமானார். இதுகுறித்து தகவல் தெரிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மதனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மனைவி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக மதன் கூறியுள்ளதோடு தொடர்ந்து மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்செல்வியின் பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என கூறி புகாரளித்த நிலையில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர்.
இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், மதனின் நண்பர்கள் மூலம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவர் தமிழ்செல்வியை அழைத்துக் கொண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கைலாசா கோனே அருவிக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்செல்வி புகைப்படத்துடன் ஆந்திராவின் நாராயணவனம் டவுண் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அருவிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 26-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தமிழ்செல்வியுடன் செல்லும் மதன், திரும்பி வரும்போது தனியாக வந்ததை உறுதி செய்தனர்.
உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் திருமணமான சில நாட்களிலேயே தனது நண்பர்களுடன் பேசிய தமிழ்செல்வி மீது மதன் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதோடு மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதன் கோனே அருவிக்கு தமிழ் செல்வியை கூட்டிச்சென்ற இடத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கும்போது ஆத்திரமடைந்த மதன் தமிழ்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகிலுள்ள முட்புதரில் தள்ளிவிட்டு வந்துவிட்டதாக மதன் கூறியுள்ளார்.
இதன்பின் மதனை அழைத்துக் கொண்டு கோனே அருவிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவர் அடையாளம் காட்டிய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தேடியும் தமிழ்செல்வி உடல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மதனின் நண்பர்களான பந்தா, சந்தோஷ் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரு மாநில காவல்துறையும் தமிழ்செல்வி என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா, இல்லை என்றால் அவரது உடல் எங்கே என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பியுள்ளனர்.