பாடல் வரிகளாலும் , வசனங்களாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் மதன் கார்க்கி. என்னதான் மதன் கார்க்கி வைரமுத்துவின் மகனாக இருந்தாலும்  தனக்கென ஒரு  தனி பாணியை வைத்திருக்கிறார். எந்திரன் மாதிரியான ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இருந்தாலும் சரி ! , பாகுபலி , ராதே ஷ்யாம் மாதிரியான ஹிஸ்டாரிக்கள் படமாக இருந்தாலும் சரி !  பேனா  மையோடு தமிழையும் கலந்து விருந்து படைத்துவிடுவார்.தமிழில் புது புது வார்த்தைகளை இந்த மனிதன் எப்படித்தான் உருவாக்குகிறாரோ தெரியாது! அகராதியிலும் அகப்படாத வார்த்தைகளுக்கு இவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். பலருக்கும் ஃபேவரெட்டான மதன் கார்க்கி , நேர்காணல் ஒன்றில் சில சுவாரஸ்யங்களை மன திறந்து பேசியிருக்கிறார்.




அதில் "பொதுவாகவே ஒரு நடிகருக்கோ, இயக்குநருக்கோ இருக்கும் தோல்விகள் போல பாடலாசிரியர்களுக்கான தோல்விகள் அவர்களை தாக்குவதில்லை. எந்த படம்  வெற்றியடைந்தாலும் , தோல்வி அடைந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனாலும் படம் வெற்றி தோல்வியின் வருத்தமும் மகிழ்ச்சியும் எனக்கு இருக்கும். கடந்த 11 ஆண்டுகளாக தோல்வி முகம் எனக்கு சினிமா துறையில் இருந்தது இல்லை.நான்  உதவி பேராசிரியராக இருந்தேன் . பாடலாசிரியராக நான் தொடர் முடியாமல் இருந்திருந்தால் , நான் பேராசிரியராகவே இருந்திருப்பேன். பாகுபலி திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டும் , ஐதராபாத் போக வேண்டிய சூழல், இரண்டு பாகம் எடுக்க வேண்டியிருப்பதால் , 3 வருடங்களுக்கு வேலை இருக்கிறது என்பதை அறிந்துதான் வேலையை விட்டேன்.  சினிமா கூட்டு முயற்சி . ஆரம்ப காலத்தில் நடிகர், தயாரிப்பாளர் என எல்லோரும் வரிகளை மாற்ற சொல்லும்பொழுது எனக்கு கோவம் வரும். ஆனால் அதை இப்போது நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.  பாடல்கள் என் குழந்தை இல்லை. அது  கமர்ஷியலுக்காக உருவாகும் விஷயம்தான்.


எனக்கு வைக்கம் விஜயலட்சுமி ரொம்ப பிடிக்கும். அவங்க குரல் ரொம்ப நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.  காதல் பாடல் எழுதும் பொழுது என் மனைவியைத்தான் நினைத்துக்கொள்வேன். என் அப்பாக்கு  ரொம்ப கோவம் வரும் . 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நான் 6 பாடங்களில் தோல்வியடைந்துவிட்டேன். ரிப்போர்ட் கார்ட் பார்த்து ரொம்ப கோவப்பட்டாரு.  சொத்துலாம் இருக்கு ஏன் படிக்கனும்னு நினைச்சுட்டியா, எதுவுமே உனக்கு கிடைக்காது.. நான் எல்லாத்தையும் எரிச்சுடுவேன். வீட்டையெல்லாம் கொளுத்திடுவேன் என பயங்கர கோவப்பட்டு , கையெழுத்து போட்டு ரிப்போர்ட் கார்டை தூக்கி போட்டு போயிட்டாரு. அது ரொம்ப இம்பாக்டா இருந்துச்சு. மற்றவர்களை விட எங்களிடம் குறைவாகத்தான் கோவப்படுவார்.


அப்பா ரொம்ப நேர்மையானவர். பண விஷயத்தில் யாரிடமும் தவறாக நடந்துகொள்ளமாட்டார்” என பகிர்ந்திருக்கிறார் மதன் கார்க்கி.