பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஒஎன்வி விருது வழங்கப்பட்ட நாளில் இருந்தே பல காரசாரமான விவாதங்கள் இணையத்தில் வெடித்து வருகின்றன. குறிப்பாக பிரபல பாடகி சீன்மயி மற்றும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி இடையே மிகப்பெரிய ட்விட்டர் கருத்துமோதல் நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.    






கவிஞர் வைரமுத்துவிற்கு ஒஎன்வி விருது அறிவிக்கப்பட்ட உடன் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது பெரிய அளவில் சர்ச்சையாக ஆக கேரளா நடிகைகள் சிலரும் வைரமுத்துவிற்கு விருது அறிவித்தது தொடர்பாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இதனால் சம்மந்தப்பட்ட அமைப்பு, விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தது. இந்தச் சூழலில் ட்விட்டரில் சின்மயி தன்னுடைய திருமணத்திற்கு எதற்காக வைரமுத்துவை அழைத்தார் என்பது தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "என் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க சொன்னதே அவருடைய மகன் மதன் கார்க்கி தான். நான் அவருடை தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறிய பிறகும் அவர் என்னை அழைக்க சொன்னார்" எனப் பதிவிட்டிருந்தார். 






இதற்கு மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார். அதில், "சின்மயி கூறுவது பொய். அவர் என்னுடைய தந்தை திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தையை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் என்னிடம் கேட்டார். நான் சந்திக்க நேரம் வாங்கி கொடுத்தேன். அதன்பின்னர் சின்மயி தனியாக என் தந்தை இல்லத்திற்கு சென்று அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்று திருமணத்திற்கு அழைத்தார்" எனப் பதிவிட்டார். அதற்கு சின்மயி பதிலளித்து ட்விட் செய்தார். 


இந்நிலையில் மதன் கார்க்கி மற்றொரு ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் 'கடந்த 2011ம் ஆண்டு மெட்ராஸ் உயர்நிதிமன்றம் தனது 150ம் ஆண்டு விழாவை கொண்டாடிய நிலையில் அந்த விழாவிற்கு தனது தந்தை பாடல் ஒன்றை எழுதியதாகவும். சில பாடகர்களுடன் இணைந்து ஒரு கச்சேரி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். மேலும் முதலில் அந்த கச்சேரிக்கு ஒப்புக்கொண்ட சீன்மயி கடைசி நிமிடத்தில் வேறு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டதால் இந்த கச்சேரியில் பங்கேற்க முடியாது என்று கூறியதாகவும்' அந்த பதிவில் கார்க்கி குறிப்பிட்டள்ளார்.   




மேலும் அவர் வெளியிட்ட அடுத்த பதிவில் "ஒரு சிலர் உங்கள் குடும்பத்தை வெறுத்து, உங்கள் அப்பா அல்லது அம்மா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், உங்கள் பெற்றோர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தால், நீங்கள் யாரை நம்புவீர்கள்? நான் என் அப்பாவை நம்புகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வசம் உண்மை உள்ளது என்று நம்பினால், அதை சட்டத்தின் முன் எடுத்துச்செல்லட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.