தமிழில் இணைய தொடராக வெளியாகி நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அயலி. கடவுள் நம்பிக்கை, சமூகத்தின் பழக்கவழக்கங்கள் என்ற சங்கிலியை உடைத்து வெற்றி நடை போடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள கதை 'அயலி'. 


இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் லிங்கா, சிங்கம்புலி, அனுமோல், மதன், அபி நக்ஷத்திரா, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் அயலி படக்குழுவினருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது ABP நாடு. இப்படத்தில் தங்களது அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்தனர் படக்குழுவினர். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.


 



முருகதாஸ் - தவசி உரையாடல் :
 
அயலி படத்தில் தமிழ்ச்செல்வியின் தந்தையாக நடித்தவர் மதன் தக்ஷிணாமூர்த்தி. நேர்காணலில் மதன் பேசுகையில் " பலரும் என்னிடம் வந்து திரையில் கம்பீரமாக நடிக்கிறீர்கள் ஆனால் நேரில் பார்த்தால் மிகவும் அமைதியானவரா இருக்கிறீர்களே என கேட்டுள்ளனர். உண்மையில் சொல்ல போனால் இது தான் நடிப்பு. அப்படி தான் நம்மை மாற்றி வைத்துள்ளார்கள். 2003ல் நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் ஒருவரை காண்பித்து இவர் தான் 'ரமணா' படத்தின் இயக்குனர் முருகதாஸ் என்றார்.


புதுக்கோட்டையில் இருந்து வந்த போது ஒரு லுங்கி, சட்டை, கண்ணாடி போட்டுக்கொண்டு புல்லட்டில் வந்து இறங்கும் மைனர் போல் இருக்கும் ஒரு நபர் நான். அடுத்த நாள் ஒரு டீ கடை வெளியே முருகதாஸ் நின்று கொண்டு இருந்தார். அவரின் அருகில் சென்று தட்டி கூப்பிட்டேன். ரமணா பட டைரக்டரா? என்றேன் அவர் ஆமாம் என்றார். படம் பார்த்தேன் நல்லா இருந்தது. இப்ப என்ன பண்றீங்க என கேட்டேன். அதற்கு அவர் சூர்யாவை வைத்து 'கஜினி' திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறினார். சரி உங்க ஆபீஸ் எங்க இருக்கு? ஓ அங்க இருக்கா, சரி நான் கூட நடிக்கலாம்னு இருக்கேன். ஆபீஸ்ல எத்தனை மணிக்கு இருப்பீங்க? என்றேன்.


அவர் 10 மணிக்கு என்றார். இல்ல 10 மணிக்கு இன்னிக்கு எனக்கு வேலை இருக்கு நான் நாளைக்கு வரேன் என்றேன். இது சத்தியமான உண்மை. இப்படி தான் நான் இருந்தேன். அதை பார்த்த எனது நண்பர்கள் எனக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்ன ஒரு டைரக்டர் கிட்ட போய் இப்படி பேசிகிட்டு இருக்க. தன்மையை பேசணும் என அட்வைஸ் பண்ணி பண்ணி என்னை இப்படி மாற்றி விட்டார்கள்" என்றார் அயலி படத்தில் தவசியாக நடித்த நடிகர் மதன். 


சுதந்திரம் என்றால் என்ன பா?


படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு இயக்குநர்களிடன் எவ்வளவு  கேட்கலாம்? என்னுடைய லிமிட் என்ன? என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். நம்முடைய சுதந்திர உணர்வு என்பதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். அப்படி சுதந்திர உணர்வோடு எல்லாம் வந்தா ராஸ்கல் உனக்கு வாய்ப்பே கிடையாது என்று விரட்டி விடுவார்கள். அப்படி நடித்து வரும் போது கிடைத்த வாய்ப்பு தான் அயலி.


நல்ல வாய்ப்புகள் அமைவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்த நேரத்தில நான் ஏதாவது அவரிடம் போய் கேட்டு உடனே அவர், இவன் கேள்வி எல்லாம் கேப்பான் போல இருக்கே என யோசித்து விட்டால் அவ்வளவு தான் வந்த வாய்ப்பும் பறிபோகும். இன்றைக்கும் பலரும் குடுத்தது என்னவோ அதை மட்டும் நடிங்க சார், நீங்களா எந்த டயலாக்கும் பேச வேண்டாம் என சொல்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஸ்க்ரிப்ட்ல போய் எங்க நாம  மாற்றுவது" என்றார் மதன்.