உண்மையான காதல் என்றும் மாறாது என்பதை வெளிப்படுத்திய எத்தனையோ காதல் திரைப்படங்கள் வெளியான தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டு அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் அணு அணுவாக ரசித்து எடுத்த திரைப்படம்தான் 'மெஹந்தி சர்க்கஸ்'. காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு அர்ப்பணிப்பாக உருவான இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி, RJ விக்னேஷ், சன்னி சார்லஸ், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 



இளையராஜா பாடல்கள் :


கொடைக்கானல் மலைகளின் அழகோடு குளிர்ச்சியாக 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதை பயணிக்கிறது. பூம்பாறை கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞன், இளையராஜாவின் பாடல்கள் மீது வெறியன் மைக்-செட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் இளையராஜாவின் காதல் பாடல்களை பதிவு செய்து ஊரில் உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் விற்று காதலை வளர்க்கிறார். அந்த கதாநாயகன் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இது தான் முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு உணர்வுபூர்வமான நடிப்பால் அசத்தி இருந்தார். 


எதிரியாகும் ஜாதி :


வடநாட்டில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று பூம்பாறைக்கு வர அதில் ஒருவராக படத்தின் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஸ்வேதா திரிபாதி. ஹீரோவுக்கு அந்த பெண் மீது கண்டதும் காதல். அதுவரையில் இளையராஜா பாடல்கள் ஒலித்த குழாய் மைக் செட்டில் ஹிந்தி பாடல்களை ஒலிக்கவிட்டு ஹீரோயின் மனதை கவர்ந்து விடுகிறார் ஹீரோ. இப்படியே அவர்கள் இடையே காதல் மலர அந்த காதலுக்கு எதிரியாக காதலர்களின் அப்பாக்கள் கொந்தளிக்கிறார்கள்.


அதற்கு காரணம் ஜாதி வெறி. மறுபக்கம் ஹீரோயின் அப்பா ஹீரோவுக்கு நெருக்கடி ஒன்றை கொடுக்கிறார். அவர்களின் ஜாதி வெறி தணிந்ததா? காதல் கனிந்ததா? நெருக்கடியை சரி செய்தாரா ஹீரோ? இது தான் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் கதைக்களம். 




பலமான இசை :


ஷான் ரோல்டன் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. படம் முழுக்க இளையராஜாவின் இசை ஒலித்து கொண்டே இருந்தது அந்த காலகட்டத்துக்கு அழைத்து சென்றது. ஒரு இடத்தில் இளையராஜாவின் பாடலோடு ஆரம்பிக்க அது ஷான் ரோல்டன் இசையாக தொடரும். இருவரின் இசைக்கும் எந்த ஒரு வேறுபாடும் காண முடியாத அளவுக்கு அற்புதமாக இசையமைத்து இருந்தார். படத்தின் பின்னணி இசை மிகவும்  அட்டகாசமாக அமைந்து இருந்தது. 


நேர்த்தியான நடிப்பு :


மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி, மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, மகாராஷ்டிர நடிகர் அன்கூர் விகால் என அனைவரும் அவரவர்களின் பங்களிப்பை வெகு சிறப்பாக கொடுத்தனர் என சொல்வதை காட்டிலும் வாழ்ந்து இருந்தனர். கதாசிரியர் ராஜூமுருகன் வசனம், செல்வகுமாரின் ஒளிப்பதிவு, அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரனின் நேர்த்தியான கதைக்களம் என அனைத்துமே படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. பல நிறைகளும் ஒரு சில குறைகளும் இருந்தபோதிலும் 'மெஹந்தி சர்க்கஸ்' ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான ஒரு அனுபவத்துடன் வரவேற்பை பெற்றது.