ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா "நான் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று தான் நான் தவெகவில் இணைந்திருக்கிறேன். கூடுதலான தகவல்களை நான் இப்போதைக்கு சொல்ல முடியாது. கொஞ்ச நாட்களில் தலைவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார்." என தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு புகாரளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவின் குற்றசாட்டை மறுத்தார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாய் கிரிஸில்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜாய் ராஹா ரங்கராஜ் என பெயரிட்டார். தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது மரபனு பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜாய் கிரிஸில்டா கூறி வருகிறார்.
கண்டுகொள்ளாத ஸ்டாலின்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சமூக வலைதளங்கள் தொடங்கி பல ஊடகங்களில் ஜாய் கிரிஸில்டா பேட்டி அளித்திருந்தார். தனக்கு நீதி வாங்கி தரும்படி ஜாய் முன்னாள் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் பல முறை கோரிக்கையும் வைத்தார். ஆனால் அரசியல் மற்றும் பண செல்வாக்கு மிகுந்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த அதிருப்தி காரணமாகவே தற்போது ஜாய் கிரிஸில்டா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. தவெக அரசில் குற்றம்சாட்டப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என ஜாய் கிரிஸில்டா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் தான் தவெகவில் இணைந்ததற்கான உண்மையான காரணத்தை ஜாய் கிரிஸில்டா வெளிப்படையாக சொல்ல மறுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் 'அது ஒரு சர்ப்ரைஸ்' என்று அவர் பதிலளித்துள்ளார்.
