விழுப்புரம் : திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த வேளையில் சலூன் கடைக்குள் புகுந்து வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தீவனூர் பகுதியில் சலூன் கடை (முடிதிருத்தகம்) ஒன்று நடத்தி வந்தார். இன்று வழக்கம் போல தினேஷ் தனது கடையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Continues below advertisement

அப்போது, அந்தப் பகுதிக்கு கார் ஒன்றில் வந்திறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென தினேஷின் சலூன் கடைக்குள் அத்துமீறி நுழைந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள், அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தினேஷை சரமாரியாக வெட்டத் தொடங்கியது.

அலறல் சத்தம் - தப்பிய கும்பல்:

மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தினேஷ் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஓடி வருவதற்குள், அந்த 5 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தினேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை:

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரோஷனை காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த தினேஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மபட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலையைத் தொடர்ந்து, தப்பியோடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை உடனடியாகக் கைது செய்ய போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தீவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்