பொங்கல் விருந்தாக தமிழில் வணங்கான், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, ராம்சரணின் கேம் சேஞ்சர் என பல படங்கள் ரிலீசாகியது. இந்த படங்களுடன் 12 வருடங்களுக்குப் பிறகு மதகஜராஜா படமும் ரிலீசானது. இந்த பொங்கல் ரேஸில் யாருமே எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஷாலின் மதகஜராஜா வசூலில் சக்கைப் போடு போட்ட வெற்றிப்படமாக மாறியுள்ளது. 


அனகோண்டா குறித்து மனம் திறந்த விஷால்:


முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இந்தப் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், விஷால் - சுந்தர் சி - விஜய் ஆண்டனி கூட்டணியை பாராட்டும் விதமாக 3 டிராகன்களின் படங்கள் காட்டப்பட்டது. 


அதைப் பார்த்த விஷால், ஏற்கனவே அனகோண்டானு சொல்லி என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. நீங்க இப்ப இதைப் போட்டு திரும்பவும் ஞாபகப்படுத்துறீங்க என்றார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் இது டிராகன் என்று கூறினார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, ஓ இது டிராகனா. சாரி.. சாரி.. நீங்க டிராகன்னு போட்ருந்தா பரவால்ல.. பாம்பைப் போட்டுருக்கீங்க. என்னையும் பாம்பா ஆக்கிருக்கீங்க என்பதற்கு சந்தோஷமாக இருக்குது என்றார்.

ஸ்ரீரெட்டி பேச்சு:


நடிகர் விஷால் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என்று கூறியது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர், விஷால் நடிப்பில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்தில் அவர் பயன்படுத்தும் பீரங்கி ஒன்றிற்கு அனகோண்டா என்று பெயர் வைத்து அந்த விமர்சனத்தை படத்திற்கு பலமாக மாற்றிக் கொண்டனர். இந்த நிலையில், மதகஜராஜா வெற்றி விழாவில் நடிகர் விஷால் அனகோண்டா குறித்து நகைச்சுவையாக பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


12 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வெற்றி:


சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்களுடன் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் மனோபாலா, மணிவண்ணன், சிட்டிபாபு, மயில்சாமி, சீனு மோகன் ஆகியோரும் நடித்திருந்தனர். சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார். 


தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் மதகஜராஜா படம் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாக மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், விஷால் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.