Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: அடுத்த நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

Union Budget 2025-26: நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்க உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி, 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தில், பாரம்பரிய நடைமுறையின்படி குட்யரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்:
அமர்வின் முதல் பகுதியில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை ஒன்பது அமர்வுகள் நடைபெறும், இதன் போது குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார். மேலும் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு சீதாராமன் பதிலளிப்பார். பல்வேறு அமைச்சகங்களின் மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும், பட்ஜெட் செயல்முறையை இறுதி செய்யவும் மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் கூடும். மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட இந்த அமர்வு ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடையும்.
8வது பட்ஜெட்:
இது சீதாராமனின் எட்டாவது பட்ஜெட் ஆகும். ஆறு முறை முழு பட்ஜெட்டையும் மற்றும் இரண்டு முறை இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்ததன் மூலம், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் இருக்கும் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையை முறியடிக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் நிதியாண்டு தொடங்கும் முன்பே கொள்கை அறிவிப்புகள் நடைமுறைக்கு வர அனுமதிக்கின்றன. ஆனால், 1997ஆம் ஆண்டுக்கு முன்பு, பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள்:
ரேட்டிங் ஏஜென்சியான ஐசிஆர்ஏ, அடுத்த நிதியாண்டில் ரூ. 11 லட்சம் கோடி மூலதனச் செலவை அரசு இலக்காகக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்க தனிநபர் வருமான வரியில் பணவீக்கத்தை சரிசெய்யும் வகையில் நிவாரணத்தையும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே சமயம் அரசாங்கக் கடன் நியாயமான வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது. வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களில் ஏற்படுத்தப்படும் சில மாற்றங்கள், நகர்ப்புற வரி செலுத்துவோருக்கு மன உறுதியை அளிக்கும் என்று பரிந்துரைத்துள்ளது. வருமான வரியின் கீழடுக்கில் வரி விகிதங்களைத் திருத்துவது அல்லது பணவீக்கம் சரிசெய்யப்பட்ட அடுக்குகளின் மறுசீரமைப்பு சில நிவாரணங்களை அளிக்கலாம் என்று நம்பப்படுகிறது.