தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான படங்கள் ரிலீசாவது வழக்கம். அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையில் களமிறங்காத காரணத்தால், ஏராளமான படங்கள் பொங்கல் பந்தயத்தில் களமிறங்கியது. அதில் யாருமே எதிர்பாராத வகையில் விஷாலின் மதகஜராஜா படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மாஸ் ஹிட் அடித்த மதகஜராஜா:
2012ம் ஆண்டு படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பல காரணங்களால் இந்த படம் வெளியாகாமலே இருந்த நிலையில் இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீசானது. 12 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் ரிலீசானதாலும், இந்த படத்தின் ட்ரெயலரில் காணப்பட்ட காமெடிகள் சுந்தர் சி கடந்த சில வருடங்களில் இயக்கிய படங்களின் காட்சிகளை நினைவுப்படுத்தியதாலும் இந்த படம் வெற்றி பெறுமா? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், 12 வருடங்கள் கழித்து வெளியானாலும் மதகஜராஜா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்ல நகைச்சுவைத் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், மதகஜராஜா படம் இந்த பொங்கல் பண்டிகை வெற்றியாளராக மாறியுள்ளது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி:
இந்த பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியிருந்தது. பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டாடும் படமாக மதகஜராஜா மாறியுள்ளது. சுந்தர் சி இயக்கியுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி நடித்துள்ளனர். இவர்களுடன் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சீனு மோகன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தற்போது உயிருடன் இல்லை. சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். சந்தானம் காமெடிக்கு திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
12 வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றி:
ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது விஷாலுக்கு மிகப்பெரிய கம்பேக்கையும், எதிர்பாராத வெற்றியையும் இந்த பொங்கலுக்கு தந்துள்ளது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் மதகஜராஜாவிற்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மதகஜராஜாவிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை 12 வருடங்கள் கழித்து வெளியான எந்த படமும் இப்படி ஒரு வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.