‛அண்ணேன் மாயன்ணே வந்துருகாக... மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக... வாம்மா மின்னல்...’ என்கிற காமெடியை இன்றும் கூட டிவிகளில் கேட்டு நாம் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கிறோம். மாயி என்கிற சீரியஸ் படத்தின் சிரிப்புகள் இன்றும் நம் பார்வைக்கு வந்து போகிறது. 


மாயி என்கிற வார்த்தை, தென்மாவட்டத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தை. கவுரவமான அந்த வார்த்தையை தலைப்பாக வைத்து, 2000 ம் ஆண்டு வெளியானது தான் மாயி. ஆகஸ்ட் 25 இதே நாளில் 22 ஆண்டுகளுக்குப் முன் வெளியான மாயி திரைப்படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. 


சரத்குமார் ,மீனா, வடிவேலு, அனந்து, ஜெய்கணேன், காக்கா ராதாகிருஷ்ணன், கோவை சரளா, மணிவண்ணன், மாஸ்டர் மகேந்திரன், பொன்னம்பலம், தியாகு, விஜயகுமார், ராஜன், ராஜன் பி தேவ், இந்து, மனோரமா, எஸ்.என்.லட்சுமி, சுபலட்சுமி இப்படி இன்னும் பிரபலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு பிரபலத்திற்கு ஒரு சீன் வைத்தால் கூட படம் முழுக்க பிரபலங்கள் தான். 






செல்வாக்கான அதே நேரத்தில் அதற்கான எந்த மிடுக்கும் இல்லாத தோற்றத்தில் அழுக்கான வேட்டி, சட்டையில் வரும் மாயியாக சரத்குமார். மாயி சகோதரியாக சுபலட்சுமி, மாயியை வெறுத்து பின்னர் அவரே காதலிக்கும் ஹீரோயினாக மீனா. இப்படி 90களில் வெளியான படங்களின் தொடர்ச்சியாக 20K வருடத்தை தொடங்கி வைத்த திரைப்படம் மாயி. 


சூர்யபிரகாஷ் இயக்கத்தில், இசையருவி எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், பி மற்றும் சி சென்டரில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். பெரிய வெற்றியை பெற்றதா தெரியாது; படுதோல்வியை சந்தித்ததா தெரியாது. முதலுக்கு மோசம் இல்லாமல், தயாரிப்பாளரை காப்பாற்றி, தியேட்டர்களை காப்பாற்றிய மினிமம் பட்ஜெட், மெகா கலெக்ஷன் திரைப்படம் என்று கூறலாம்.


இன்றும் குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இந்த திரைப்படம், வடிவேலு காமெடியால் அன்றும், இன்றும், என்றும் அறியப்படும். மைனர் வேடத்தில் வரும் வடிவேலு செய்யும் ரகளையும், அவரது மனைவியாக வரும் கோவை சரளாவின் கிண்டலும், போதாக்குறைக்கு காக்கா ராதாகிருஷ்ணன் செய்யும் ரவுசும் , படத்தை பெரிய காமெடி பாதைக்கு அழைத்துச் சென்றது. 






‛வாம்மா... மின்னல்’ என்கிற அந்த படத்தின் காமெடி டயலாக், இன்றும் ஒருவரை கேலியாக கிண்டல் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு, காமெடி ட்ராக் பெரிய அளவில் வேலை செய்தது, அந்த படத்தில். 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான ஒரு திரைப்படத்தை இன்றும் நினைவு கூறும் போது, அது பிரமிப்பாக தான் இருக்கிறது.