மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் மாவீரன் படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள் முழிவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இன்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் உரையாடும் குரல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. “காதுல ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு” என சிவகார்த்திகேயன் ட்ரெய்லரில் கூறும் வசனங்கள் கவனம் ஈர்த்த நிலையில், சிவகார்த்திகேயன் எதற்காக மேலே பார்க்கிறார் என ரசிகர்கள் பல கருத்துகளை இணையத்தில் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்தக் குரல் விஜய் சேதுபதியில் குரல் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படக்குழு இத்தகவலை தற்போது உறுதி செய்துள்ளது.
மேலும் ‘வீரமே ஜெயம்’ என விஜய் சேதுபதி பேசும் டயலாக் இடம்பெற்றுள்ள காட்சியையும் படக்குழு பகிர்ந்துள்ளது. டியர் ப்ரதர் விஜய் சேதுபதி.. உங்கள் அன்பான செயலுக்கு நன்றி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.