சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை, தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை  ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜுலை 14ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.






சொல்லி கொடுத்த அப்டேட்:


மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கிஸ் காலையில் தெரிவித்து இருந்தது. அதைதொடர்ந்து தான், மாவீரன் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவீரன் பட விவரங்கள்:


தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் ’மடோனா அஸ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாவீரன் ‘.  இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார்.  நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் மாவீரன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.


மாறிய வெளியீட்டு தேதி:


மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தற்போது முன்கூட்டியே ஜுலை 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெற்றியை எதிர்பார்க்கும் சிவகார்த்திகேயன்:


கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அவரது வழக்கமான படங்களைப்போல இப்படமும் காமெடி கலந்த காதல் கதையாக இருந்தது. இதனால் அப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தேசிய விருந்து பெற்ற மண்டேலா படத்தின் இயக்குனர் கூட்டணியில்  வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.