மாவீரனில் ஒரு காமிக் ஆர்டிஸ்டாக நடித்து இருப்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு தனது நடிப்பு முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள மாவீரன், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. மாவீரன் வெளியாவதை ஒட்டி படக்குழு புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மாவீரன் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வினின் முதல் படமான மண்டேலாவை போல் மாவீரனில் சமூக அக்கறை இருக்கும் என்றார். ஆனால், படத்தில் கருத்து சொல்லும் அளவுக்கு எந்த டயலாக்கும் இடம் பெற்றிருக்காது என கூறியுள்ளார். மடோன் அஸ்வினின் தனது பொறுமையின் மூலம் அனைவரிடமும் தேவையான நடிப்பை வாங்கி விடுவார் என்ற சிவகார்த்திகேயன், அவருடைய இயக்கத்தில் நடித்ததில் பலவற்றை கற்று கொண்டதாக தெரிவித்தார்.
மாவீரனில் தன்னுடைய நடிப்பு வழக்கமான பாணியில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்ற சிவகார்த்திகேயன், மிஷ்கின் உடனான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். மிஷ்கினை பார்க்கும் போது அவர் ரொம்ப கோபக்காரர் என எண்ணியதாகவும், ஆனால், அவருடன் பழகிய பின்பு தான் மிஷ்கின் எவ்வளவு அன்பானவர் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். மாவீரனில் வில்லனாக வந்து அசத்தி இருப்பதால் இனி மிஷ்கினுக்கு டைரக்ட் செய்ய டைம் இருக்காது என்றும், மிஷ்கினை நடிகனாக மாற்ற எல்லாரும் ஆசைப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், சரிதா மேடம் கண்களால் தனது நடிப்பை காட்டியதாக கூறி புகழ்ந்தார். ஷீட்டிங் ஸ்பாட்டில் சரிதா தொடர்ந்து வெட்கப்பட்டு கொண்டே இருப்பார்கள் என்ற சிவகார்த்திகேயன், ஹீரோயின் அதிதி ஷங்கர் உள்ளிட்டோரின் நடிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், மாவீரனில், ஒரு காமிக் ஆர்டிஸ்டாக தான் நடித்துள்ளதாகவும், கன்னித்தீவு போல வரும் கேரக்டரை தான் ஓவியமாக வரைவது தனது ரோல் என்றும் கூறியுள்ளார். தற்போது டைக்ரஷன் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்ற சிவகார்த்திகேயன், டைரக்டரா இருப்பது ரொம்ப கஷ்டமான வேலை என்றார்.