சிவகார்த்திகேயன், மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் இணைந்துள்ள படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். மண்டேலா படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்திருந்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் படத்துக்கும் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தப் படத்தின் ’சீனா... சீனா...’எனும் முதல் இன்று பாடல் ரிலீசாகியுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் சிஎம். லோகேஷ் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஷோபி கொரியாகிராஃப் செய்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் துள்ளலான நடன அசைவுகளுடன் இப்பாடல் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலைக் கேட்க இங்க க்ளிக் செய்யுங்க...
சிவகார்த்திகேயன் பிறந்த நாள்
சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாள் பரிசாக இப்பாடலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு ’மெரினா’ படம் மூலம் சின்னத்திரை டூ வெள்ளித்திரை கால் பதித்த நடிகர் சிவகார்த்திகேயன், குறுகிய காலத்துக்குள் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் 11 ஆண்டு திரை வாழ்வை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் முன்னதாக மாவீரன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி வீடியோ பகிர்ந்திருந்தனர்.
சிவகார்த்திகேயன், அதிதி தவிர்த்து இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா, யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள்
மேலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பான இப்படம் அமையும் என்றும், இப்படத்துக்காக அதி நவீன மோகோபாட் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இது போன்ற கேமராவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' திரைப்படத்துக்காக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், யசோதா புலி முருகன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் மாவீரன் படத்துக்காக சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
சென்னை ஈசிஆரை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடலும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு இப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.