மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் மலையாள டிரைலரை முன்னணி நடிகரும் , தமிழ் ரசிகர்களை அதிகம் கொண்டவருமான நடிகர் நிவின் பாலி வெளியிடுவார் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சரியாக அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநாடு படத்தின் டிரையிலரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் நிவின் பாலி வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பை ரீட்வீட் செய்த இயக்குநர் வெங்கட் பிரபு, நிவின் பாலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞராக வலம் வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதுமே, சிம்பு நேரத்திற்கு வந்து நடித்து கொடுக்கமாட்டார் என்று சொல்லப்பட்டது. அதுபோலவே, சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்களும் சிம்பு ஏன் இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்காமல், காலம் தாழ்த்துகிறார் என்று புலம்பினார்கள்.
சிம்பு நடிப்பார் என்று நம்பிக்கையோடு இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். அதன்பிறகு, உடல் எடையை குறைத்த சிம்பு படத்திற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.அதன்பிறகு ‘மாநாடு’ படம் மீண்டும் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . யாரும் எதிர்பாராத வகையில், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு ‘மாநாடு’ படத்தை நடித்து கொடுத்து முடித்தார். மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கடந்த 11-ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மாநாடு, அண்ணாத்த, தீபாவளி ரேஸில் குதிக்க உள்ளது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.