சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திற்கும் மாநாடுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்தப் படக்குழு எனக்கு நான்காவது தலைமுறை. சில சமயங்களில் இவர்களைப் பார்க்கும்போது எனக்கு பயம் வருகிறது. நாங்களும்தான் படங்கள் எடுத்தோம். ஆனால், இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிரமாண்டமாக இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக இருக்கிறது. சிம்பு இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார். எல்லாரும் சொல்வார்கள் சிம்புவைப் பற்றி. அவருடைய சில சேட்டைகள் எனக்குப் பிடிக்கும். அந்த சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை.
சிம்புவுடன் ஒரு படம் நடித்தேன். அவர் ஒரு அற்புதமான குழந்தை. வெளியில் சொல்வதெல்லாம் சும்மா. அவர் மிகவும் அன்பானவர். அவரோடு பணிபுரியும்போது நானும் அவரும் ஒன்று என்றே நினைத்துக்கொள்வேன்.
இளையராஜா வீட்டுப் பிள்ளைகள், கங்கை அமரன் வீட்டுப் பிள்ளைகள், என் மகன் எல்லோரும் ஒன்று சேர்ந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் உங்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி.
சுப்பு பஞ்சுவின் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். பஞ்சு அருணாச்சலம் அண்ணனை இப்போது நினைத்தாலும் மனம் உருகிவிடும். இதையெல்லாம் பார்க்க அவர் இன்று இல்லை” என்றார்.
முன்னதாக விழாவில் பேசிய சிம்பு, “எனக்கு நிறைய பிரச்னைகள் கொடுக்கிறார்கள். பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என ரசிகர்களிடம் உருக்கமாக அழுதுகொண்டே வேண்டுகோள் வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்