‛ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்களும் வருவார்கள்...’ முதல்வருக்கு மாநாடு தயாரிப்பாளர் கடிதம்!

மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement

திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. அதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக முதல்வருக்கு, வணக்கம்.

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் தொடங்கிவிட்டன.

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. ‘அண்ணாத்த’ மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பைத் தந்தது திரைத் துறையினர் நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியைத் தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு.


ஆனால், இப்போது தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும்.

 

ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களைச் சான்றிதழ் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள். அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

தயவுகூர்ந்து 18 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழவைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்... திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola