மாநாடு திரைப்படம் பல தடைகளையும் கடந்து திரையரங்குகளில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் Time Loop கான்செப்ட் பற்றியும், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு குறித்தும் ரசிகர்கள் சிலாகித்து பேசிவருகின்றனர். ஆனால், வழக்கமாக பலரும் திரைகளில் பேச மறுக்கும் விஷயத்தையும் பேசியிருக்கிறது மாநாடு.


படத்தின் தொடக்கத்தில் இருந்தே இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் வலிகளை வார்த்தைகளாக, வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. படத்தில் அப்துல் காலிக் என்ற இசுலாமியராக நடித்திருப்பார் சிம்பு. பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.


விமானத்தில், நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் தன்னை சிம்புவிடம் சீதாலட்சுமி என்று தன்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும்போது, உங்கள் பெயர் என்ன என்று கேட்பார். அதற்கு சிம்பு, ‘காலிக், அப்துல் காலிக்’ என்று சொல்வார். சீதாலட்சுமியான கல்யாணி பிரியதர்ஷன், நீங்க முஸ்லீமா என சிம்புவிடம் கேட்பார். அதற்கு சிம்பு,  ஆமா, முஸ்லீம்ன்னா என்கிட்ட பேசியிருக்க மாட்டீங்கல ? என கேட்பார்.  


அப்போது சீதாலட்சுமி, ’அப்டியில்ல. என்னோட பிரண்ட்ஸ் நிறைய பேர் முஸ்லீம்தான்’  ரம்ஜான் அன்னிக்கு எங்க வீட்டுக்கு பக்கெட் பக்கெட்டா பிரியாணி அனுப்புவாங்க தெரியுமா ? என சிம்புவை பார்த்து சொல்வார், அதற்கு பதில் சொல்லும் அப்துல் காலிக்கான சிம்புவோ, ‘பிரியாணி அப்டின்னா மட்டும்தானே எங்க ஞாபகம் எல்லாம் உங்களுக்கு வரும்’ என சீதாலட்சுமியை பார்த்து கேட்பார்.


இது வெறும் படத்தின் வசனமோ, சாதாரணமாக கடந்துபோய்விடக்கூடிய கேள்வியோ அல்ல. இந்தியாவில் இருக்கும் மாற்று சமூகத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியிடம் தாங்களே கேட்டு, தெளிவு பெற வேண்டிய கேள்வி. இசுலாமியர்கள் என்றால் அவர்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகளாகதான் இருப்பார்கள் என்ற சித்தரிப்புகளை இன்றும் நம்பும் பலரது நெஞ்சங்களை நோக்கி  இயக்குநரால் எழுப்பப்பட்ட கேள்வி கணை இது.


முதல்வரை கொல்ல, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஒரு இசுலாமியரின் மகனான ரஃபீக்கை தேர்வு செய்யும் போலீசார், பின்னர், அவருக்கு மாற்றாக அப்துல் காலிக் என்ற இசுலாமியரான சிம்புவை மிரட்டி, முதல்வரை கொல்ல சொல்கின்றனர். கொலை, வன்முறை, தீவிரவாதம் என்றால் அதை செய்தது இசுலாமியர்களாகதான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியில் புரையோடிப்போன புரட்டுகளை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது இந்த காட்சிகள்.


‘இன்னும் எத்தன நாளைக்குதான் ஒரு சமூகத்தையே தீவிரவாதிகள் அப்டின்னு முத்திரை குத்துவீங்க’ என சிம்பு காவல் துறை அதிகாரியான எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசும் வசனங்கள், வெறும் வசனங்கள் அல்ல, அது இந்த நாட்டில், இன்னும் இசுலாமியர்கள் எதிர்கொண்டு வரும் வலிகள்.


மாநாடு’ என்ற பரபரப்பான ஒரு படத்தில் எந்த சர்சைகளும் எழுந்துவிடாதபடி, மிக கவனமாக இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களை, கஷ்டங்களை, வலிகளை திரைமொழி வாயிலாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கும் வெங்கட் பிரபு, இயக்குநர் என்ற அடையாளத்தை கடந்து, சமூக பொறுப்புணர்வு கொண்ட மனிதராக மிளிர்கிறார்.