மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியாகி உள்ள மாமன்னன் படம் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்ததுடன், உலகளவில் ஒறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


எப்பொழுதும் காமெடி நடிகராக கொண்டாடப்பட்டு வந்த வடிவேலு மாமன்னனில் முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறுபட்ட கேரக்டரில் நடித்து இருந்தார். ரத்னவேலுவாக வில்லன் கேரக்டரில் நடித்துள்ள பகத் பாசில் சாதி ஆதிக்கத்தை திரையில் காண்பித்து தன் கதாபாத்திரத்துக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.


தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தாலும், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் மனசாட்சியின் உருவத்தை நடிப்பு மூலம் காட்டி இருப்பார் உதயநிதி ஸ்டாலின். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான மாமன்னன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த 27ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்சில் மாமன்னன் வெளியானது. 


இந்நிலையில், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாமன்னன் இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடத்தை பிடித்தது. இந்தியா முழுக்க ரசிகர்களை பெற்ற இந்த படம் தற்போது உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவிலான டாப் பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும் அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் மாமன்னன் திரைப்படம் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் பயனாளர்கள் மாமன்னன் திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர்.






வித்தியாசமான கேரக்டரில் வடிவேலு நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பாடல்கள்,  பின்னணி இசையைக் கொடுத்திருப்பார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்த மாமன்னன் படத்துக்கு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RKவின் எடிட்டிங் நல்ல சினிமா அனுபவத்தை  ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.


மாமன்னன் வெளியானதும், அது அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை எனப் பலரும் கருத்து கூறி வந்தனர். தனபாலும் இதேபோன்று சாதி அடக்குமுறையை எதிர்த்ததாக அதிமுகவினர் பேசி வந்தனர். எனினும், சமூக நீதி பேசும் மாமன்னன் உலக அளவில் டிரெண்டாகி வருவது படக்குழுவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பலரும் பாராட்டி வருகின்றனர்.


முன்னதாக மாமன்னன் படத்தை ஓடிடியில் பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘மாமன்னன் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தான் இன்னும் மீளவில்லை’ என டிவிட்டரில் பகிர்ந்து மாரி செல்வராஜை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.