மாமன்னன் திரைப்படம் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜின் மாமமன்னன் திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. நடிரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதுவே தன் திரைப்பயணத்தில் இறுதியான திரைப்படம் என அறிவித்துவிட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக மாமன்னன் திரைப்படம் இணையத்தில் பேசுபொருளானது.
வசூலில் சாதித்தாரா மாமன்னன்?
நடிகர் வடிவேலு டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூன்.29) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே மேலோங்கி வரும் நிலையில், படக்குழுவினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாள் மாமன்னன் திரைப்படம் இந்தியா முழுவதும் 5.50 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் இத்தகவலைப் பகிர்ந்துள்ளது.
வார இறுதி நாள்கள்
மேலும் உதயநிதி ஸ்டாலின் தன் இத்தனை ஆண்டு திரைப்பயணத்திலேயே இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நேற்றைய மாலை மற்றும் இரவுக் காட்சிகளில் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகவும் சினிமா வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மாலைக் காட்சிகள் தொடங்கி வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு என அடுத்த மூன்று நாள்களுக்கு மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படம் சுமார் 35 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை
சென்ற மாத இறுதியில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் உள்பட கோலிவுட்டின் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படத்தை விமர்சித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது கலவையான விமர்சனங்களைப் பெற்று பேசுபொருளானது. கடந்த வாரம் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது முதல். தேவர் மகன் Vs மாமன்னன் எனும் விவாதம் சூடுபிடித்து இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.