உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற சேரனின் ‘வெற்றிக்கொடி கட்டு’ படம் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


கவனிக்க வைக்கப்பட்ட சேரனின் படங்கள் 


பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசியகீதம் ஆகிய படங்களை தொடர்ந்து மண் மணம் மாறாமல் மனித உணர்வுகளை பதிவு செய்த சேரனின் படம் ‘வெற்றிக்கொடிக்கட்டு. இந்த படம் சேரனின் பெயரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற செய்தது. வெளிநாட்டு வேலை மோகத்தில் பணத்தை தொலைத்து நற்கதியாக நிற்கும் அனைவருக்கும் பாடம் சொல்லும் படமாய் ‘வெற்றிக்கொடி கட்டு’ அமைந்தது என்றே சொல்லலாம். 


பார்த்திபன், முரளி, மீனா, மனோரமா, மாளவிகா, ரமேஷ் கண்ணா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 



படத்தின் கதை 


வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு பணத்தை தொலைக்கும் பார்த்திபனும், முரளியும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள். பணத்தை இழந்தது தெரிந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேண்டும் என்பது தெரிகிறது. இதனால் பார்த்திபன் வீட்டுக்கு முரளியும், முரளியின் வீட்டுக்கு பார்த்திபனும் சென்று இருவரும் துபாயில் நலமுடன் இருப்பதாக நம்ப வைக்கிறார்கள். 


முரளியின் அம்மாவாக வரும் மனோராமாவின் துணையோடு பார்த்திபன் பால் வியாபாரம் செய்கிறார். இந்த பக்கம் பார்த்திபன் மனைவி மீனாவின் துணையோடு முரளி உணவகம் நடத்துகிறார். இருவரின் குடும்பமும் பொருளாதாரத்தில் முன்னேறுகிறது. முரளி மீது பார்த்திபன் தங்கை மாளவிகாவுக்கு காதல் ஏற்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் இருந்தும் சொந்த குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனிடையே தங்களை போல பணத்தை ஏமாந்த சார்லி மூலம் மோசடிக்காரர் ஆனந்தராஜை கண்டுபிடித்து பழி வாங்குகின்றனர். இருகுடும்பமும் ஒன்று சேர்வது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. 


நடிப்பில் மின்னிய பிரபலங்கள் 


அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இந்த படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்தார்கள்என சொல்லலாம். இன்றும் மீம் மெட்டீரியல்களாக  உள்ள பார்த்திபன்-வடிவேலு ‘துபாய் காமெடி’ நகைச்சுவை,  பணத்தை இழந்ததால் மனநிலை பிறழ்ந்தவர்போல் நடிக்கும் நேரும் சார்லி, கடமை தவறாத காவல்துறை அதிகாரி ராஜீன் என பிற கேரக்டர்களும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. 


மகனின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் மீனா, காதல் திருமணம் செய்து நன்றாக வாழ வேண்டும் என வைராக்கியத்தோடு சாதிக்கும் மீனா என இன்றும் அனைவரின் நடிப்பும் பாராட்டைப் பெறும். 


வெளிநாட்டு வேலை ஆசையில் பணத்தை இழந்தவர்களின் துயரத்தை திரையில் முதன்முதலாக பதிவு செய்த படம் ‘வெற்றிக் கொடிக்கட்டு’. இந்த படம்  சமூகப் பிரச்சினைகளைப் பேசிய சிறந்த திரைப்படம் என்னும் பிரிவில் தேசிய விருதை வென்றது. மேலும் 2000ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் கைப்பற்றியது. தேவாவின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் இன்றும் பலரது ஆல்டைம் பேவரைட் பாடலில் ஒன்று. 


இப்படி எண்ணற்ற நினைவுகளை கொண்ட வெற்றிக்கொடி கட்டுபடம் அனைவரும் ஒரு பாடம்...!