இயக்குநர் சீனு ராமசாமி குஜராத்தி திரைப்படமான செல்லோ ஷோ திரைப்படம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் நியமனம் செய்யப்பட்டதற்காக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 






அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "மாமனிதன் படக்குழு குஜராத்தி திரைப்படமான செல்லோ ஷோ திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் 2023 இல் அதிகாரப்பூர்வ நியமனம் செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவிக்கிறது. மேலும் மாமனிதன் திரைப்படமும் செலக்சன் பட்டியலில் இருந்த முதல் பதிமூன்று திரைப்படங்களில் இடம்பெற்று இருந்தது. துரதிஷ்டவசமாக எங்கள் வாய்ப்பு கைநழுவிப் போனது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் மாமனிதன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகி காயத்ரி சங்கர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.


மாமனிதன் :


இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை முளைத்த நிலையில், நீண்ட நாட்களாக இந்தப்படம் கிடப்பிலேயே இருந்தது. 


அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். அப்படி இப்படியுமாக இந்தப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தக்கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,இந்தப்படத்தின் மீது அதே மாதிரியான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வந்தனர். 






படம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த போதினும், கதையின் ப்ளாட் அதரபழையதாக இருந்த காரணத்தால்  படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. விளைவு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். அதனால் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்து ரேஸில் இருந்து வெளியேறியது மாமனிதன். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளம் மாமனிதன் படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் காலை வாரிய  ‘மாமனிதன்’ ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ஆஹா குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது. தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது.