லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லியோ படத்தில் நடித்த நடிகை திரிஷா மற்றும் மடோனா குறித்து அநாகரீகமாக மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. 


பிரபலங்கள் கண்டனம் :


மன்சூர் அலிகான் தன்னை பற்றி ஆபாசமாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் நடிகை திரிஷா. பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் சர்ச்சையான கருத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


 



எம்.எஸ். பாஸ்கர் கண்டனம் :


நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சையான கருத்திற்கு பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவின் படி "நடிகை திரிஷாவுடன் இணைந்து 'தி ரோடு' படத்தில் நடித்திருந்தேன். படப்பிடிப்பு சமயங்களில் அவர் மிகவும் மரியாதையுடனும், தன்மையுடனும் பழக கூடியவர். மரியாதைக்குரிய சகோதரர் திரு. மன்சூர் அலிகான், நடிகைகளான திரிஷா, மடோனா, குஷ்பூ மற்றும் ரோஜா குறித்து தெரிவித்த கருத்து ரசிக்கும் படியாக இல்லை. நகைச்சுவையாக பேசுகிறேன் என்ற பெயரில் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.  


வக்ர குணம் படைத்த சிலர் இதை வைத்து நடிகைகளை எப்படி மோசமாக கமெண்ட் செய்கிறார்கள் என்பதை சகோதரர் பார்க்க வேண்டும். இது அவசியமான பிரச்சினையா என்பதை சற்று சிந்தித்து பேசி இருக்க வேண்டும். இனி இவ்வாறு பேசாதீர்கள்!" என வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகை எம்.எஸ். பாஸ்கர். 


 



நடிகர் சங்கத்தின் அறிக்கை :


தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த சர்ச்சையான பேச்சை கண்டித்து மன்சூர் அலிகானுக்கு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திரைத்துறையில் சாதித்து வரும் பெண்களை இழிவு படுத்தும் படி மோசமான கருத்துக்களை தெரிவித்ததை வன்மையாக கண்டித்து ஊடகம் முன்னர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரையில் தற்காலிகமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என கருதுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மன்சூர் அலிகான் விளக்கம் :


இப்படி பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் அளிக்கையில் "தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்கும் ஜாதி இல்லை" என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் "நான் தவறாக எதுவும் பேசவில்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பார்த்தல் நான் என்ன பேசினேன் என தெரிய வரும்" என மன்சூர் அலிகான் பதிலளித்துள்ளார்.