புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 100வது திரைப்படம் "ஒளி விளக்கு". ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ். வாசன் தயாரிக்க, தாபி சாணக்யா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 1966ல் வெளியான ஹிந்தி திரைப்படமான "பிஹூல் ஆர் பத்தர்" படத்தின் ரீ மேக் திரைப்படமாகும். இப்படம் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த முதல் வண்ணத் திரைப்படமாகவும். 


 


54 ஆண்டுகள் நிறைவு:


 


செப்டம்பர் மாதம் 1968ல் வெளியான "ஒளி விளக்கு" திரைப்படம் இன்றோடு 54 ஆண்டுகளை கடந்து விட்டன. ஜெ. ஜெயலலிதா மற்றும் சௌகார் ஜானகி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களோடு ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், சோ ராமசுவாமி, தேங்காய் சீனிவாசன், ராமராவ் மற்றும் வி.எஸ்.ராகவன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். ஜெயலலிதா கதாபாத்திரத்தை விடவும் சௌகார் ஜானகி கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. அவரின் நடிப்பும் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.   


 


 



 


ஜனரஞ்சகமான திரைப்படம்:


1968ம் ஆண்டில் வெளியான படங்களில் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது "ஒளி விளக்கு" திரைப்படம். கிட்டத்தட்ட 98 நாட்களுக்கு இப்படம் திரையரங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கையில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் ஒரு ஜனரஞ்சகமான என்பதற்கு எடுக்கட்டாக அதிரடி, அன்பு,  ரொமான்ஸ், சண்டை, கிளப் டான்ஸ், சோக காட்சிகள் என அனைத்தின் கலவையாக அமைந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் கொள்ளை கூட்டத்தில் சில சந்தர்ப்பத்தால் கூட்டாளியாக இருந்தாலும்  நல்ல குணம் கொண்ட ஓர் கதாபத்திரமாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். 


 


எம்.ஜிஆர் ஃபார்முலா இப்படத்தில் இல்லை:


பலரும் எம்.ஜி.ஆரின் கால்ஷீட் பெறுவதற்காக காத்து கொண்டு இருந்த நிலையில் தனது 100 வது படத்திற்கான பொறுப்பை ஜெமினி நிறுவனத்திற்கு வழங்கினார். தனது வழக்கமான ஃபார்முலா படமாக இது இல்லாமல் சற்று வித்தியாசமாக ஒரு வில்லத்தனமான ஹீரோ கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க நடித்து இருந்தார். சில திரைப்படங்களில் அவர் கெட்டவன் ரோலில் நடித்திருந்தாலும் பிறகு நல்லவனாக மாறும் கதாபத்திரம் போல் நடித்திருப்பார் ஆனால் இப்படத்தில் அப்படி இல்லாமல் படத்தின் முடிவு வரையில் கெட்டவனாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   


 



 


மரண படுக்கையின் போது ஒலித்த பாடல் :


 


இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்து இருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் மரண படுக்கையில் இருந்த போது ஒட்டுமொத்த தமிழகமே அவருக்காக பிராத்தனை மேற்கொண்டது. அந்த சமயத்தில் எங்கும் ஒலித்தது கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு..." என்ற பாடல் தான். இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் "ஒளி விளக்கு". பி.சுசீலாவின் குரலில் உருகி உருகி பாடிய இந்த பாடல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்தும் எம்.ஜி.ஆர் பூரண குணம் அடைவதற்காக வேண்டி தமிழகமெங்கும் ஒலித்தது. படம் வெளியான போது கூட இந்த பாடல் இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.