‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து மனம் வருந்தி ட்வீட் செய்துள்ளது தமிழ் திரையுலகினரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் நிலையில், இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச்.29) மாலை நடைபெறுகிறது. 


தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருடன் அவர்களது திரைப்பயணத்தின் தொடக்கம் முதலே இணைந்து தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவுடன் பணியாற்றி வருகிறார்கள்


ஆனால் சின்மயி உள்பட திரைத்துறையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வைரமுத்து மீது ‘மீ டூ’ குற்றச்சாட்டுகளை முன்னதாக முன்வைத்த நிலையில், ட்விட்டரில் இது குறித்து கடும் விவாதங்கள் எழுந்தன.


’பொன்னியின் செல்வன்’ திரைப்பட உருவாக்கம் தொடங்கியது முதலே வைரமுத்து இந்தப் படத்தின் பணியாற்றுவார் என்றும் சுமார் 12 பாடல்களை பொன்னியின் செல்வன் படத்துக்காக எழுத உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.


ஆனால் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் அறிமுகமான பாடகி சின்மயி, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா உள்ளிட்டோர் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்று குறித்து ட்விட்டரில் கடும் எதிர்ப்புகள் வெடித்தன.


இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வைரமுத்து விலகியதாகத் தகவல்கள் வெளிவந்தன. எனினும் இதுகுறித்து முன்னதாக கேள்வி எழுப்பப்பட்டபோது,  வைரமுத்துவுடன் தான் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அவர் திறமையில் சந்தேகமில்லை, ஆனால், வைரமுத்து தாண்டி பல புதிய திறமையாளர்கள் உள்ளதாகவும் மணிரத்னம் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


மற்றொருபுறம் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் தற்போது வெளியாகவிருக்கும் பாகம் இரண்டு படங்களில் வைரமுத்து இணைந்து பணியாற்றாதது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு நாளான இன்று வைரமுத்து ட்விட்டரில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. "கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும், விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும்..


எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே... காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்"  என வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.






வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாடகி சின்மயி, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட இசை வெளியீட்டு விழா நாளான இன்று, வைரமுத்து இவ்வாறு ட்வீட் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.