தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து. தமிழ் திரையுலகில் ஒலிக்கும் மிகவும் பிரபலமான எவர்கிரீன் பாடல்களை எழுதியவர். மூத்த கலைஞரான இவருக்கும் உச்ச நட்சத்திர கலைஞர்களான கமல்ஹாசன், மணிரத்னம், பாரதிராஜா, இளையராஜா, ரஜினிகாந்த் ஆகியோருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமானது ஆகும்.


நடிகர் ரஜினிகாந்திற்காக ஏராளமான பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து அவருக்கும் ரஜினிகாந்திற்கும் இடையேயான நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவிடம் நடிகர் ரஜினிகாந்த் தன்னை வைத்து படம் எப்போது தயாரிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டதாகவுடும், இப்போது வரை ஏன் ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்கவில்லை? என்றும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


தேடிச்சென்று கேட்ட ரஜினிகாந்த்:


இதுதொடர்பாக, வைரமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “‘கொடிபறக்குது’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது ‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ பாடலை எழுதி எடுத்துக்கொண்டு பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருந்தேன். ரஜினியை ஒப்பனையில் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்தேன். படப்பிடிப்புத் தளங்களில் பார்க்கமுடியாத என்னைப் பார்த்ததும் ரஜினி தன் உடல்மொழியில் ஆச்சரியம் காட்டினார். காட்சிகளின் இடைவெளியில் அவரும் நானும் தனியானோம்.






என் தோளில் கைபோட்டுக்கொண்டே ஓர் ஓரமாய்ப் பொடிநடை போனார் உறுதியான சொற்களில் என்னைப் பார்த்துச் சொன்னார்: “இளையராஜாவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டேன்; பாரதிராஜாவுக்கு இந்தப்படம் நடித்துக்கொண்டிருக்கிறேன்; அடுத்து நீங்கள்தான். எப்போது என்னை வைத்துப் படம் செய்யப் போகிறீர்கள்; நான் தயார்” என்றார் ஒன்றும் பேசாமல் நின்றேன். சில கணங்கள் சென்றபிறகு மீண்டும் தன்னிலை அடைந்தேன்.


வைரமுத்துவின் வைராக்கியம்:


"மிக்க நன்றி இப்படிக் கேட்பதற்கே பேருள்ளம் வேண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நான் உங்களைத்தான் அணுகுவேன்” அவர் கைகளைப் பற்றிக்கொண்டு தழுதழுத்தேன். இன்றுவரை அந்த வாக்குறுதி அப்படியே இருக்கிறது. அவரும் அதை மறந்திருக்க மாட்டார். ஆண்டு பலவாக அந்த வார்த்தைகளை நான் அசைபோட்டே வந்திருக்கிறேன். நண்பர்களாய் இருப்பது புனிதமானது; வியாபாரிகளாய் இருப்பது கணிதமானது. கணிதம் புனிதத்தைக் கெடுத்துவிடும்; கெடவிடமாட்டேன். அதனால், இப்போது மட்டுமல்ல எப்போதும் கேட்கமாட்டேன்"


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


ALSO READ | Meiyazhagan Movie Review : கார்த்தி அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் பட திரை விமர்சனம்..