நான் எந்தவொரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உருவாக்க விரும்பவில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 


ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோரோடு புதுமுகங்கள் நடித்துள்ள படம் “பனை”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இசைத்தட்டை வெளியிட்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “தயவு செய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். பாமர மக்கள் தமிழை விரும்பும் நிலையில் சினிமாவுலகினர் அவர்களிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதனை பின்வருமாறு காணலாம். 


கேள்வி: இளையராஜாவை பற்றி பேசியதற்கு அவரது சகோதரர் கங்கை அமரன் உங்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு கவிஞர் உலகில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? 


பதில்: முடிந்த கதை தொடர வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள். இதுகுறித்து பேசுவது பண்பாட்டு ரீதியான உயர்ந்தது இல்லை. 


கேள்வி: இளையராஜா - வைரமுத்து பிரச்சினை முடிக்கப்பட்டால் திரையில் இன்னும் நல்ல பாடல்கள் வரும் என்கிறார்களே? 


பதில்: இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகும் நான் நல்ல பாடல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுத்து கொண்டிருக்கிறேன் என்பதை பதிவு செய்யலாம். இன்னும் நிறைய பாடல்கள் வரும். 


கேள்வி: பாடல்களில் தமிழ் வார்த்தைகளில் இல்லை என சொன்னீர்களே? உங்கள் பையனே கூகுள் கூகுள் என ஆங்கில சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்களே? 


பதில்: கூகுள் என்பது பெயர்ச்சொல். அதை நாம் தவிர்க்க முடியாது. பைடன், அமெரிக்கா, புதின் போன்ற பெயர்ச்சொல்லை அப்படியே தான் பயன்படுத்த முடியும். 


தொடர்ந்து பேசிய வைரமுத்து, நான் எந்தவொரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உருவாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றது. அவற்றில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன். ஆனால் காலம் சர்ச்சைகளை முடிக்க விரும்பவில்லை என தெரிகிறது. சமூகம் சர்ச்சைகளை உருவாக்கி அதில் குளிர் காய விரும்புகிறது. மனிதர்கள் சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன். சர்ச்சைகளில் இருந்து விலக விரும்புகிறேன்” என தெரிவித்தார்.