வாலியோ, எல்.ஆர்.ஈஸ்வரியோ இல்லை யாராக இருந்தாலும் சரி அவரவருக்கு என்று ஒரு தனித்திறமை இல்லாவிட்டால் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது என்று கவிஞர் வாலி பேசிய ஃப்ளாஷ்பேக்கை நினைவு கூறலாம்


60களில் தமிழ் கலைஞரும், முன்னணி திரைப்பட பாடலாசிரியராக விளங்கிய கவிஞர் வாலி, திரைப்படங்களில் கிட்டத்தட்ட 15,000 பாடல்களுக்கு மேலாக எழுதி சாதனை புரிந்தவர். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்திருக்கிறார்.


அவருடைய பழைய பேட்டியிலிருந்து..


”1958 டிசம்பரில் நான் முதல் முதலில் நான் பாடல் எழுதினேன். அதன் பின்னர் ஆடிக்கொன்றும் அமாவாசைக்கும் ஒன்றுமாக பாடல் எழுதினேன். அதனால் ஒரு விரக்தி வந்தது. அப்போது நான் படித்திருந்ததால் மதுரையில் டிவிஎஸ் அலுவலகத்தில் ஒரு வேலை கேட்டேன். என் நண்பர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். அவர் எனக்கு வேலை தருவதாகச் சொன்னார். அப்போது தான் என் அறைக்கு பிபிஎஸ் வந்தார். அவரிடம் கடைசியாக என்ன பாட்டு பாடினீர். பாடிக் காட்டும் என்றேன். அவர் மயக்கமா கலக்கமா...மனதிலே குழப்பமா என்று பாடினார். அந்தப் பாடல் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னாளில் நான் கண்ணதாசன் கிட்டச் சொல்வேன் நீ மட்டும் அந்தப் பாடலை எழுதாவிட்டால் நான் உனக்குப் போட்டியாக ஒரு ஆளாகவே உருவாகி இருக்க மாட்டேன் என்பேன். 1963ல் விஸ்வநாதன் ராமமூர்த்தியைப் பார்த்தப் பின்னால் என் திரை வாழ்வில் சறுக்கலே வரவில்லை. அவருக்கு மட்டும் நான் 4000 பாடல்களை எழுதியிருக்கிறேன். 


எனக்கு ஆரம்ப நாளில் ரூ.250 சம்பளம் வரும். அப்போது வெறும் 35 பைசாவுக்கு சாப்பாடு சாப்பிடலாம். ஒரு பாட்டு எழுதினால் மூன்று மாதத்திற்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.


கே.வி மகாதேவனை நான் புறக்கணித்தேன்...
நான் ஆரம்ப நாட்களில் வாய்ப்பு தேடியபோது நீங்காத நினைவு படத்திற்காக பாட்டு எழுத என்னை மாடர்ன் தியேட்டர் சுலைமான் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது கேவி மகாதேவனும், புகழேந்தியும் உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா. பண சம்பாத்திக்க வேண்டாமா? ஏதோ வாலி, தோலின்னும் கூட்டிட்டு வர்றீங்க என்று திட்டுகிறார்கள். எனக்கு அது காதில் கேட்கிறது. அப்புறம் நான் வளர்ந்துவிட்டேன். விஸ்வநாதன் அண்ணாவுக்கு நிறைய எழுதுகிறேன். அப்போதுதான் என்னிடம் மெழுகுவர்த்தி, உடன்பிறப்பு, தாலி பாக்கியம் படங்களுக்கு பாடல் எழுத கூப்பிடுகிறார்கள். இந்த மூன்றௌ படங்களும் அடுத்தடுத்த நாட்களில் பூஜை போடப்பட்டது. மூன்று படங்களுக்குமே கேவி மகாதேவன் தான் மியூசிக் எனக் கூறுகிறார்கள். உடனே நான் பாடல் எழுத முடியாதுன்னு சொல்லிட்டேன். நீங்கா நினைவு படத்தில் எனக்கு வாய்ப்பு மறுத்து அசிங்கப்படுத்தினார்கள். நான் வளர்ந்த பின்னர் அவர்களை அசிங்கப்படுத்தினேன். ராமாவரம் தோட்டத்தில் இருந்து கொண்டு பாடல் எழுத முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்புறம் மகாதேவன் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னரே பாடல்களை எழுதினேன். நீங்க ஒரு பாட்டைப் பாருங்க.. என் ட்யூனுக்கு வரவில்லை என்று ஏதாவது சொல்ல வேண்டும். எந்தவிதமான எடை தூக்கிப் பார்த்தலும் இல்லாமல் எப்படி நிராகரித்தீர்கள் என்று மகாதேவனிடம் கேட்டேன்.


நான் நன்றாக வளர்ந்த பின்னர் என்னிடம் ஒருவர் நான் உங்களுக்கு உதவியாளராக வருகிறேன் என்று நச்சரித்தார். அவர் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தவர். இன்னொருவரும் சென்னைக்காரர்தான். மூன்றாவது நபர் கிராமத்து இளைஞர். இந்த மூவரின் நச்சரிப்புக்கும் நான் செவி சாய்க்கவில்லை. பின்னர் அவர்களாகவே வளர்ந்தனர். ஒருவர் ராம நாராயணன், இன்னொருவர் ஆர்.சி.சக்தி மூன்றாவது நபர் கங்கை அமரன். அதனால் வாலியோ, எல்.ஆர்.ஈஸ்வரியோ இல்லை யாராக இருந்தாலும் சரி அவரவருக்கு என்று ஒரு தனித்திறமை இல்லாவிட்டால் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது. நான் சொன்ன மூன்று பேரும் தனித் திறமையை நிரூபித்து வளர்ந்தவர்கள். இந்த சினிமா உலகம் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு சிவப்பு கம்பளம் எல்லாம் போடாது. நாம் தான் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கவேண்டும்”


இவ்வாறு அவர் கூறினார்.