Kabilan Daughter Thoorigai Death: பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ”பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழை தொடங்கும் போது தூரிகை கபிலன் பேசியதாவது, ”பெண்ணாக இருப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதனால் தான் பெண்களை மையமாக வைத்து இந்த இணைய பத்திரிகையைத் தொடங்கினேன். அதேநேரத்தில் இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காக தொடங்கப்பட்டது அல்ல. மாறாக பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறை பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல. பெண்கள் குறித்தும் அவர்களுடைய நேர்மறையான பக்கங்கள் குறித்தும் வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன்” என்று பேசியிருந்தார். இந்த பீயிங் வுமன் (Being Women Magazine ) இதழை நடிகரும் இயக்குநருமான சேரன் மற்றும் இயக்குநரும் செயல்பாட்டாளருமான பா. ரஞ்சித் ஆகியோர் துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது தூரிகை கபிலன் தனது பெயருக்கு ஏற்றவாரு அதிக ஓவியங்களை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என இயக்குநர் சேரன் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
தூரிகை கபிலன், இணைய இதழை நடத்தியது மட்டும் இல்லாமல், பாடல் ஆல்பங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். மேலும், அவர், சின்னத்திரை சீரியல்களுக்கு உடை அலங்காரமும் செய்து வந்துள்ளார். அத்துடன் தூரிகை டாட்.காம் எனும் இணைய தளத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து அதனை பதிவிட்டும் வந்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 15 ஆயிரம் இணைய வாசிகள் பின் தொடருகின்றனர். இவரது தற்கொலை செய்தி குடும்பத்தினர், சினிமா வட்டாரத்தினர் மற்றும் இவரது நண்பர்களுக்கும் ஃபாலோவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி அறிந்த பலர் பாடலாசிரியர் கபிலன் வீட்டிற்கு விரைந்து செல்கின்றனர். மிகவும் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும், சிறுவயதிலேயே பல திறமைகளையும் வளர்த்துக்கொண்டு செயல்பட்டு வந்த தூரிகை கபிலன் தற்கொலை செய்துகொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேலும், இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுகுறித்து போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050