கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ். சமூகத்தில் பாலியல் உறவுகள் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது லஸ்ட் ஸ்டோரீஸ். தற்போது இந்த ஆந்தலாஜியின் இரண்டாம் பாகம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.


தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர், விஜய் வர்மா, திலோதமா ஷோமே ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


முதல் கதை


ஒரு தம்பதி நீண்ட காலம் சேர்ந்து வாழத் தேவையான முக்கியமான ஒன்று என்ன. நல்ல குணமா, நல்ல பொருளாதார நிலையா,  இரண்டு பேருக்கும் ஒத்துப்போகும் ரசணைகளா, இது எல்லாமும் தான்..


ஆனால் இவற்றுக்கு மேல் ஒன்று இருக்கிறது. நல்ல உடலுறவு என்று உங்களிடம் ஒருவர் சொன்னால் முகம் சுளிப்பீர்களா? அதுவும் இரண்டும் குடும்பங்கள் உங்களது திருமணத்தை நிச்சயிக்கும் தருணத்தில் டீ , சமோசாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இதை சொன்னால். அதைதான் தனது அனுபவத்தில் இருந்து சொல்கிறார் ஒருவர்.


காதலில் காமத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கும் ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலான விவாதத்தை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் பால்கி.


ஆனால் நகைச்சுவை படத்தில் இருந்ததா என்றால் இல்லை.. பேத்தி கதாபாத்திரத்தில் நடித்த மிருணால் தாக்கூர் எல்லாவற்றுக்கும் மிகையான  நடிப்பை கொடுத்ததன் மூலமாக நம்மை நகைச்சுவை என்று நம்பவைக்க முயற்சித்தார்களா என்று தெரியவில்லை. எந்த வித முரணையும்  உணர்த்தாமல் செக்ஸ் குறித்தான ஒரு விளம்பரம் போல் கடந்துவிடுகிறது படம். பால்கியின் படங்களில் எப்போதும் ஒரு பிரச்சனை இருக்கும். அரைவேக்காட்டுடன் இருக்கும் ஒரு உணவை சமைத்து அதுதானே அதன் பக்குவம் என்று நம்பவைக்க முயற்சிப்பார்.


மேலும் ஒரு திருமண உறவில் காமத்தின் உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது பற்றி பேச முனைந்த இயக்குநர் ஒரு நல்ல உடலுறவு என்பதை குறித்தான தெளிவற்ற  பிம்பங்களையே முன்வைக்கிறார். அதாவது படுக்கையில்  ஆண் பெண் ஆகிய இருவரும் திருப்தி அடைவதை  சிறந்த இல்லற வாழ்க்கைக்கான கருதுகோலாக முன்வைக்கும்  பால்கி, கூடுதலாக  இந்த மாதிரியான கதையில் அவர் செய்திருக்க வேண்டியது காமத்தின் அழகியலை புரிந்துகொள்வதன் மூலம் அது எப்படி அதில் பங்கேற்கும் இருவருக்குமான நிறைவை நோக்கி நகர்கிறது என்பதை சித்தரிப்பதுதான்...


செக்ஸ் எஷுகேஷன் என்று நெட்ஃப்ளிகஸில் ஒரு பிரித்தானிய இணையத் தொடர் இருக்கிறது. அந்தத் தொடரின் ஒரு எபிசோடை முடிந்தால் பார்த்துவிடுங்கள். காமம் தொடர்பான விஷயங்களை  நல்ல நகைச்சுவைகளுடன் எப்படி படமாக்குவது என்பது பற்றிய ஒரு அனுமானம் கிடைக்கும். லஸ்ட் ஸ்டோரீஸின் முதல் கதை பூட்டிய கதவுகளை உடைக்க உடைக்க முயற்சிக்கும் உடைந்த சுத்தியல்.