Sonu Sood Arrest Warrant: மோசடி வழக்கில் நடிகர் சோனு சூட்டை கைது செய்ய, லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோனு சூட்டிற்கு கைது வாரண்ட்:
மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட்டை கைது செய்ய, பஞ்சாப் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானா நீதித்துறை நடுவர் ராமன்பிரீத் கவுர் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளார். லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா, மோஹித் சுக்லா என்பவர் மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக வழக்கைத் தொடர்ந்தார். அதில், போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய தன்னை ஈர்த்ததாக கூறினார். இந்த வழக்கில் சோனு சூட்டிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க சோனு சூட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார், ஆனால் அவர் ஆஜராகத் தவறிவிட்டார். இதனால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு என்ன?
லூதியானா நீதிமன்றம் தனது உத்தரவில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்ய உத்தரவிட்டது. அதில், ”சோனு சூட், முறையாக சம்மன்(கள்) அல்லது வாரண்ட்(கள்) அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஆஜராகத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இதன் மூலம் உங்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வாரண்டை 10-02-2025 அன்று அல்லது அதற்கு முன்னர், அது செயல்படுத்தப்பட்ட நாள் மற்றும் அது செயல்படுத்தப்பட்ட விதம் அல்லது அது செயல்படுத்தப்படாததற்கான காரணத்தை சான்றளிக்கும் ஒப்புதலுடன் திருப்பி அனுப்புமாறு இதன்மூலம் நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள் " என குறிப்பிட்ட காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் ”சோனு சூட்”
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என ஆரம்ப கட்டங்களில் பல படங்களில் நடித்து இருந்தாலும், கொரோனா தொற்று காலத்தின் போது அவர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் மூலம் சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமானார். அந்த நேரத்தின் உண்மையான நாயகனாக கொண்டாடப்பட்டார். ஜனங்களின் நாயகானகவும் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது வாரண்ட், பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மயில் கொரோனா காலத்தில் நடந்த சைபர் குற்றங்களை மையப்படுத்தி, Fateh எனும் திரைப்படத்தை சோனு சூட் இயக்கி நடித்து இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என கூறப்படுகிறது.