தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்கள் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண். அட்டகத்தி படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான தினேஷ் விசாரணை, ஒருநாள் கூத்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கபாலி என பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஏராளமான அவருக்கு ஒரு வலுவான வெற்றி கிடைக்காமலே இருந்து வந்தது. அவரைப்போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இதுவரை ஒரு தரமான வெற்றி அமையவில்லை.


தினேஷூக்கு முன்பு அணுகியது யார் தெரியுமா?


இந்த சூழலில், இவர்கள் இருவரும் இணைந்து அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடித்த திரைப்படம் லப்பர் பந்து. உள்ளூர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. மெய்யழகன், தேவாரா, ஹிட்லர் என புதுப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் லப்பர் பந்திற்கான வரவேற்பு இதுவரை குறையவில்லை.


லப்பர் பந்து படத்தில் நடித்த தினேஷ் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. லப்பர் பந்து படத்தில் முதன்முதலில் தினேஷ் கதாபாத்திரத்தில்  நடிக்க இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அணுகியது பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை என்ற இன்ப அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


ஏன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவில்லை?


இந்த கதையை கேட்ட எஸ்.ஜே.சூர்யாவிற்கு கெத்து கதாபாத்திரம் மிகவும் பிடித்து போகியுள்ளது. அவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க படத்தயாரிப்பு நிறுவனத்தால் இயலவில்லை. இதையடுத்தே, அவருக்கு பதிலாக படக்குழு நடிகர் தினேஷை அணுகியுள்ளனர்.


கதாநாயகனாக நடித்து வரும் தினேஷிடம் படக்குழு தயக்கத்துடனே இந்த கதாபாத்திரத்தை கூறியுள்ளனர். ஆனாலும், கதையில் உள்ள தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து படத்தில் நடிக்க தினேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் உறுதி செய்யும் விதத்தில் தற்போது சமூக வலைதளங்களில் கெத்து கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


தொடர்ந்து ஹவுஸ்புல்:


லப்பர் பந்து படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் தினேஷூம், அன்பு கதாபாத்திரத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் புதுப்படங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.